தேற்றரவாளன் Jeffersonville, Indiana, USA 61-1001E 1நன்றி, சகோ. நெவில். மாலை வணக்கம், நண்பர்களே இன்றிரவு கர்த்தருடைய வீட்டுக்கு மறுபடியுமாக இந்த ஆராதனைக்கு வந்து, அவருக்கு மறுபடியும் ஊழியம் செய்வது ஒரு சிலாக்கியமே. அவருக்கு ஊழியம் செய்யக் கிடைக்கு சிலாக்கியமே எனக்கு இதுவரை நடந்த மிகப் பெரிய காரியம் என்று எண்ணுகிறேன். உங்களுக்கு ஊழியம் செய்வதன் மூலம் அவருக்கு ஊழியம் செய்கிறேன் என்று நான் அறிந்திருக்கிறேன் “இந்த சிறியரில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களே அதை எனக்கே செய்தீர்கள்” (மத். 25:40). அவருடை வார்த்தைகளில் ஒன்று கூட தவறாது. 2இந்த நேரத்தை நான் எடுத்துக் கொண்டு, என் தாயார் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்று அறிவிக்க விரும்புகிறேன் அதாவது சற்று முன்பு நான் மருத்துவமனையை விட்டுப் புறப்பட்ட போது. இன்றிரவு இராப்போஜன ஆராத முடிந்தவுடன், நானும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்று அவர்களுடன் இருக்கப் போகிறோம். இந்த இன்னல் நேரத்தில் எங்களுக்காக நீங்கள் ஜெபித்து வருகிறதற்காகவும், உங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்க அழகான கார்டுகளையும் மலர்களையும் என் தாயாருக்கு நீங்கள் அனுப்பினதற்காகவும் என் தாயாரின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அவர்கள் நன்றி தெரிவிக்க முடியாத நிலையில் உள்ள காரணத்தால். அதை நான் நிச்சயம் பாராட்டுகிறேன், அவர்களும் கூட. உங்களுக்கு மிகவும் தயவாய் என் நன்றி. என்னால் முடிந்தவரை அதையே நான் உங்களுக்குத் திரும்பச் செய்வேன். அது உங்களுக்குத் தெரியும். ஒருக்கால் நீங்கள் இதை அறிந்தவர்களாய்... 3அவர்கள் மரணத்தருவாயிலிருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் மருத்துவர் அப்படி நினைக்கிறார். போன ஞாயிற்றுக் கிழமையே அவர்கள் மரித்துக் கொண்டிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். இந்த வாரம் முழுவதும் பிள்ளைகள் ஒருவர் மாறி ஒருவர் தொடர்ந்து மருத்துவமனையில் உட்கார்ந்து தாயார் போவதற்காக காத்திருந்தனர். இந்த நேரத்தில் அவர்களுடைய நிலைமை முன்னைக் காட்டிலும் மோசமாயுள்ளது. அவர்களில் மருத்துவர் இருபத்திரண்டு கோளாறுகளை கண்டு பிடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். வேறொரு மருத்துவர் வந்து, “அதை நான் நம்பமாட்டேன்” என்றார். முடிவில் ஒரு மருத்துவர் வந்து, “அவர்கள் வயோதிப, தேய்ந்து போன தாயார். இனிமேல் வாழ்வதற்கு அவர்கள் மிகவும் களைப்புற்றிருக்கிறார்கள் என்றார்”. அது தான் உண்மையான நிலையை குறிப்பிடுகிறது என்று எண்ணுகிறேன். அது உண்மை. அவர்கள் பத்து பிள்ளைகளுக்குத் தாய். அவர்களுக்கு கடுமையான காலம் இருந்தது. நாங்கள் ஏழைகளாக வாழ்ந்தோம். காரியங்கள் இருக்க வேண்டிய விதத்தில் இருக்கவில்லை என்று எண்ணுகிறேன். அவர்கள் களைப்புற்று, தேய்ந்து போய், வீடு சென்று கொண்டிருக்கிறார்கள். 4நான் பிரசங்கித்து விசுவாசித்து வரும் இந்த மகத்தான் சுவிசேஷம் எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது. அது, நாம் மகிழ்ச்சியாயுள்ள நேரத்தில் மாத்திரமல்ல, நாம் சோர்வடைந்துள்ள போதும் கிரியை செய்கிறது. அது என் ஆறுதல். என் தாயார் மரித்துவிடுவார்கள் என்று என்னால் நம்பவே முடியாது, ஏனெனில் அவர்களுக்கு நித்திய ஜீவன் உள்ளது. பாருங்கள். “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவான். 11:25-26). என் ஆண்டவர் அவ்வாறு கூறியுள்ளார். அந்த வார்த்தைகளை நான் பற்றிக் கொண்டிருக்கிறேன். நாம் அனைவரும் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் நம்முடைய விலையேறப்பெற்ற போதகர் இன்றிரவு என் தாயாரைக் குறித்து கூறினது போன்று, இந்த பூமியில் கடைசி மூச்சு விட்டுக் கொண்டிருப்பவர்களின் அந்த சோர்ந்த, நீண்டு கொண்டிருக்கிற நேரம். 5திருமதி ஃபார்டிஸ் என்னும் பெயர் கொண்ட எங்கள் சிநேகிதி வேறொருத்தி என் தாயாரின் அடுத்த படுக்கையில் இருதய வியாதி காரணமாக மரணத்தருவாயிலிருக்கிறாள். அநேக முறை நாங்கள் எதிர் பக்கத்தில் வசித்த அவளிடமிருந்து காய்கறி முதலானவை வாங்கியிருக்கிறோம். அவள் சர்ஸ்மேய்ட் என்னும் நகர்புறத்தில் வசிக்கிறாள். அது அவள் என்று நான் முதலில் அறிந்து கொள்ளவில்லை. அவளை உற்றுப் பார்த்த பிறகு அறிந்து கொண்டேன். அவளுக்கு எழுபத்தைந்து அல்லது எழுபத்தாறு வயதிருக்கும். அவளுக்கு மூத்த சகோதரிகள் இருவர் உள்ளனர். அவர்கள் அவளைக் காண வந்திருந்தனர். அவர்கள் சென்ற பிறகு, நான் அவளிடம் நடந்து சென்றேன். அவள், “நீங்கள் சுவிசேஷகர் பிரான்ஹாம் தானே” என்றாள். நான், “ஆம், அம்மணி” என்றேன். அவள் அழத் தொடங்கினாள். அவள், “நான் தொடுவேன்... உங்கள் தாயார் அடுத்த படுக்கையில் உள்ளதாக கேள்விப்பட்டேன். எங்கள் இருவருக்குமிடையே ஒரு திரை மாத்திரம் உள்ளது” என்றாள். நான், “ஆம்” என்றேன். அவள், “நாங்கள் இருவரும் ஒருக்கால் ஒரே நேரத்தில் செல்வோம்”, என்றாள். 6நான், “திருமதி ஃபார்டிஸ், உன்னை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், சகோதரியே. உயர் மேட்டிலுள்ள உன் இடத்தின் வழியாக நான் நடந்து செல்லும் போது. நீ மண்வெட்டியால் நிலத்தைத் தோண்டி கடினமாக உழைத்து காய்கறிகளை வளர்த்து, பிறகு அவைகளை சைக்கிளில் வைத்து மிதித்து பட்டினம் பூராவும் விற்று வீடு திரும்புவதை நான் கண்டிருக்கிறேன். நீ நேர்மையாக வாழ்ந்து வந்தாய். என் கர்த்தரை உன் இரட்சகராக அறிந்திருக்கிறாயா?” என்று கேட்டேன். அவள், “அவரை என் இரட்சகராக அறிந்திருக்கிறேன். மரண இருளின் பள்ளத்தாக்கிலே என்னை நடத்திச் செல்ல அவருடைய கிருபையையே நான் நம்பியிருக்கிறேன்” என்றாள். நான், “அம்மா ஒருக்கால் உன்னோடு கூட அந்த பள்ளத்தாக்கிலே நடக்காமல் இருக்கலாம்”, ஆனால் அவர் நடப்பார் என்றேன். நாங்கள் ஜெபித்தோம். அவள் என் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். நான் கையை இழுத்துக் கொண்டு வெளியே வர வேண்டியதாயிற்று. 7அறைக்கு எதிரே திருமதி கெய்தர் இருந்தாள். அவள் வேறொரு வயோதிப தாய். சில மணி நேரத்துக்கு முன்பு அவள் கர்த்தருடன் கூட இருக்கச் சென்றுவிட்டாள். நீரிழிவு வியாதி காரணமாக அவளுடைய இரு கால்களும் முறித்தெடுக்கப்பட்டன. அப்பொழுது நான் என்ன கவனித்தேன் என்றால்... அவளுடைய கணவர் ஒரு கால் முறித்தெடுக்கப்பட்டவராய் அங்கு கிடக்கிறார். இது துயரம் நிறைந்த உலகம். இவ்வுலகின் மாயையான ஐசுவரியங்களை, இச்சியாதே அது வேகம் அழிந்துவிடும், உன் நம்பிக்கையை நித்திய காரியங்களின் மேல் கட்டு, அவை ஒருக்காலும் ஒழிந்து போகாது. 8முப்பத்தோரு ஆண்டுகளாக நான் இந்த பிரசங்க பீடத்திலும் உலகம் பூராவிலும் நின்றிருக்கிறேன். ஏனெனில் உலகம் என் பிரசங்க பீடம் என்று உரிமை கோருபவன் நான். நித்திய ஜீவனுக்கான இந்த வார்த்தையை நான் ஜனங்களுக்கு அளிக்க முயன்றிருக்கிறேன். நீங்கள் வாழ்க்கை பாதையின் முடிவுக்கு வரும்போது. அது ஒன்று மாத்திரமே உங்களுக்கு உதவ வல்லது. அப்படியிருக்க நீங்கள் ஏன் வேறெதாவதன் பேரில் நம்பிக்கை வைக்க வேண்டும்? நாம் எதை நம்ப முடியும்? அன்றொரு நாள் அம்மா என்னிடம், அவர்கள் போக ஆயத்தமாயிருக்கிறார்கள் என்று கூறின போது, நான் அவர்களிடம் சென்று பேசினேன். என் மாமியார் திருமதி ப்ராயிடம், அவர்கள் இவ்வுலகை விட்டுச் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, நான் சென்று பேசினேன். அவர்களுக்கு நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். என் சொந்த அம்மாவுக்கு, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இப்பொழுது நாங்கள் வசிக்கும் இடத்துக்கு கீழேயுள்ள ஆற்றில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். 9ஏறக்குறைய நூறு வயதான அவர்களுடைய தந்தைக்கு சேற்றுத் தண்ணீரில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். திமிர்வாதம் கொண்ட கையுடன் நடுக்கம் கொண்டிருந்த அந்த வயோதிபர் என் முகத்தைப் பிடித்துக் கொண்டு, என்னை முகத்துக்கு நேராக நோக்கி, கட்டியணைத்த காட்சி இப்பொழுதும் என் கண் முன்னேயுள்ளது. அவரை நான் மறுபுறம் சந்திப்பேன். ஓ, ஆமாம். ஆம். என் நம்பிக்கை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலும் அவருடைய நீதியிலுமேயன்றி வெறொன்றின் மேலும் கட்டப்படவில்லை என் ஆத்துமா சுற்றிலும் சோர்ந்து போகும் போது அவரே என் நம்பிக்கையும் என் உறைவிடமுமானவர் கிறிஸ்து என்னும் அந்த திடமான பாறையின் மேல் நிற்கிறேன் மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்து போகும் மணலே. 10இன்றிரவு இராப்போஜனம். நான் வருவதாக வாக்களித்தேன். அநேகர் பேட்டிகளைப் பெற விண்ணப்பித்துள்ளதாக பில்லி இன்று என்னிடம் கூறினான். நான் அளிக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் இம்முறை அவைகளை நீக்கி விட முடியுமா என்று அவனிடம் கேட்டுக் கொண்டேன். என் நிலைமை உங்களுக்கு விளங்குமென்று நிச்சயம் நம்புகிறேன். நான் சிறிது அதிர்ச்சி அடைந்துள்ளேன். அது எனக்கு எப்படியிருக்குமென்று உங்களுக்குத் தெரியும். இருப்பினும் என் கர்த்தரை நான் நம்பியிருக்கிறேன். அவருடைய கிருபை எனக்குப் போதும். அது மாத்திரமே எனக்குத் தேவை. எனவே, எனக்காக ஜெபியுங்கள். எனக்கு ஜெபம் தேவையாயுள்ளது. தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக உங்கள் வாழ்க்கை பாதையின் முடிவுக்கு நீங்கள் வரும்போது, மறுபிறப்பு பெறாமல் அங்கு அடைய மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 11நான் பில்லியைக் குறித்து அங்கு யோசித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய தாயார், என் மனைவி, மரித்துக் கொண்டிருந்த வேளையில் அவளுடைய கையை பிடித்தேன். இப்பொழுது என் தாயார் உள்ள அறைக்கு சில அறைகள் கீழே தான் அவள் இருந்தாள். அவள் நோக்கின போது; அவள் மரிப்பதற்கு முன்பு அவளுக்கு ஒரு அனுபவம் உண்டானது. அவள் அப்பொழுது ஒரு இளம் பெண், இருபத்திரண்டு வயதுடையவள். இரண்டு பிள்ளைகளுக்குத் தாய். அவள் என்னிடம், “பில்லி, அதைக் குறித்து நீங்கள் பேசியிருக்கிறீர்கள், அதைக் குறித்து பிரசங்கம் செய்திருக்கிறீர்கள், அது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. அது எவ்வளவு மகிமையாயுள்ளது தெரியுமா!” என்றாள். அப்பொழுது தான் நாங்கள் இந்த பழமையான சுவிசேஷ வழியைக் கண்டு கொண்டவர்களாயிருந்தோம். அவள், “பில்லி, அதில் நிலைத்திருங்கள்! அதை விட்டுவிடாதீர்கள்! இப்படிப்பட்ட நேரத்தில் அது பலனைத் தரும்” என்றாள். நான், நான் காலையில் உன்னை பிரகாசமான பளிங்கான வாசலில் சந்திப்பேன் அப்பொழுது துயரம் அனைத்தும் விலகியிருக்கும் வாழ்க்கையின் நீண்ட களைப்புற்ற நாள் முடிவடையும் போது நான் வாசலில் நிற்பேன், அப்பொழுது கதவுகள் விரிவாகத்திறக்கும் என்றேன். அதுதான். எனக்குள் இருக்கும் எல்லாவற்றைக் கொண்டும் அதை விசுவாசிக்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன். அன்று காலை உங்கள் ஒவ்வொருவரையும் நான் சந்திப்பேன் என்று நம்புகிறேன். அன்று காலை என் புன்சிரிப்பினால் என்னைக் கண்டு கொள்வீர்கள் சகோ. நெவிலும் மற்றவர்களும், அந்த பாடலில் கூறுவது போல், அன்று காலை உங்களை நான்கு சதுரமாக கட்டியுள்ள நகரத்தில் காண்பேன் (அது மிகவும் தத்ரூபமாக இருக்கும்). 12இரண்டு நாட்களுக்கு முன்பு நான் மருத்துவமனையிலிருந்து வந்து கொண்டிருந்த போது பென்சில்வேனியா ரெயில் மைதானத்தில் ஒரு கூடாரம் போட்டிருக்கக் கண்டேன். அது 9ம் தெருவுக்கும் 10ம் தெருவுக்கும் இடையே ஸ்பிரிங் தெருவுக்கு சிறிது அப்பால் என்று நினைக்கிறேன். அங்கு “வரங்களின் ஊழியம்” என்று எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த சகோதரன் யாரென்று எனக்குத் தெரியாது. அவரை நான் முன்பு சந்தித்திருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு சகோதரன், அவர் நகரத்துக்கு வந்து கூட்டங்களை நடத்துகிறார். இவ்வளவு பெரிய நகரத்துக்கு அவர் வந்து, யாருமே கூட்டத்துக்கு வராமல் போனால், அது எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியும். அவரை எனக்குத் தெரியாது. இதை அறிவிக்க அவர் என்னிடம் கூறவில்லை. ஆனால் நீங்கள் எல்லோருமே, எங்காவது போக விரும்பினால், அங்கு சென்று நமது சகோதரன் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதை கேட்டால் நலமாயிருக்கும் என்று எண்ணுகிறேன். அவர் கிறிஸ்துவின் பிள்ளைகளில் ஒருவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த குளிர்ந்த செப்டம்பர் மாதத்தில் அவர் கூடாரத்தைப் போட்டு, நமது கர்த்தருக்கு ஏதாவதொன்றைச் செய்ய முனையமாட்டார். எனவே இந்த வாரம் நமது சகோதரனிடம் சென்று, அவர் பிரசங்கம் செய்வதைக் கேளுங்கள். இப்பொழுது. நான் கூற வேண்டிய அறிவிப்புகள் இவ்வளவுதான் என்று நினைக்கிறேன். 13ஆனால் இந்த ஒன்றை நான் நிச்சயம் கூற விரும்புகிறேன். நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள நிலையை நான் பாராட்டுகிறேன். இப்படிப்பட்ட குளிர் காலத்தில், இப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் இந்த சிறு பழைய சபைக்கு வருகை தந்து, இங்கேயே இருக்கிறீர்கள். நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்? ஒருவரொருவர் இல்லாமல் நாம் என்ன செய்ய முடியும்? நாம் ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய நேரம். ஓ, அவர்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள் அவர்கள் தூர தேசங்களிலிருந்து வருவார்கள் மேடாவும் மேபலும் இன்று காலை இந்தப் பாடலை எனக்காகப் பாட வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் இப்பொழுது அவர்களால் அதை செய்ய முடியாது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் சுவிசேஷப் பயணத்தை நான் தொடங்கின போது, அவர்கள் இந்தப் பாடலை பாடி என்னை அனுப்பினார்கள். அந்த பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். நமது ராஜாவுடன் அவருடைய விருந்தாளியாக விருந்துண்ண தெய்வீக அன்பினால் பிரகாசிக்கும் அவருடைய பிரகாசமுள்ள முகத்தைக் காண இந்த யாத்திரீகர்கள் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! அவருடைய கிரீடத்தில் ஜொலிக்கும் இரத்தினங்களாய் அவருடைய கிருபையில் பங்கு கொள்கின்றனர்! 14இன்று காலை நான் துரிதமாக முடிக்க வேண்டும். அம்மா எப்படியோ சிறிது தேறிவிட்டார்கள். அவர்களுக்கு ஏறக்குறைய மூச்சு நின்றுவிட்டது. அவர்கள் என்னைக் கூப்பிட்ட போது, அம்மா மூச்சு விடவில்லை. ஆனால் எப்படியோ அவர்கள் தேறி, மறுபடியும் மூச்சு விடத் தொடங்கினார்கள். அம்மாவுக்கு தெரியாது. ஆனால் நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது. தேவன் தான் அவர்களை உயிருடன் சிறிது நேரம் வைத்திருந்தார். இன்றிரவு நான் இங்குள்ள போது, அவர் அதை செய்வார் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். 15இப்பொழுது நாம் ஜெபிக்கும் போது சிறிது நேரம் தலைவணங்குவோம். நாம் தலைவணங்கியிருக்கும் போது, இந்த பயபக்தியான கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இதை கேட்பதனால் நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இப்பொழுது நான் அறிந்துள்ளபடி, இந்தக் கேள்வி வாலிபர் வயோதிபர் இருவருக்குமே. வாலிபப் பெண்களே, என்றாவது ஒரு நாள், என் தாயார் இன்றிரவு உள்ள நிலையை நீங்கள் அடைய வேண்டும் வாலிப ஆண்களாகிய நீங்களும். நாமெல்லாருமே ஒரு நாளில் அந்த நிலையை அடைய வேண்டும். நீங்கள் தேவனைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறீர்கள் என்னும் உறுதியைப் பெறாமலிருந்தால், யாருமே காணாதிருக்கும் இந்த வேளையில் உங்கள் கைகளை தேவனிடம் உயர்த்தி, “தேவனே, என்னை நினைவு கூரும்” என்று சொல்வீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, எல்லாவிடங்களிலும். “ஓ தேவனே; என்னை நினைவு கூருவீராக”! நான் அந்த நிலையை ஒரு நாள் அடைய வேண்டும். ஒருக்கால் அப்பொழுது நான் நினைவிழந்த நிலையில் இருக்கக்கூடும். எனவே நான் போவதற்கு முன்பு, எனக்குத் தெளிந்த புத்தி உள்ள நிலையிலே, என் ஆத்துமா தேவனை அடையும் என்று உறுதி கொள்ள விரும்புகிறேன். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். ஏனெனில் நீர் என்னோடு கூட இருக்கிறீர். 16இப்பொழுதும், பரலோகப் பிதாவே, கரங்களையுயர்த்தின் இந்த விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை விசுவாசத்தின் மூலம் என் கரங்களில் கொண்டு வந்து, இவர்களை உமது கிருபாசனத்தண்டையில் உயர்த்துகிறோம். இந்த ஒன்றை நான் அறிந்தவனாய். பிதாவே, இங்கு வியாதியஸ்தர், உபத்திரவப்படுகிறவர் இருக்கக் கூடும். ஆனால், தேவனே, கைகளையுயர்த்தினவருக்கு உள்ள தேவை போன்று வேறு யாருக்குமே இல்லை. வியாதியஸ்தர் சுகமடைந்தால், அவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்ந்து, ஒருக்கால் மறுபடியும் வியாதிப்பட வகையுண்டு என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். ஆனால், ஓ, தேவனே, இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரை ஏற்றுக் கொண்டு, நித்திய ஜீவனைப் பெற்று, மறுபடியும் பிறக்கும் போது, அவர்களைத் தேவனிடத்திலிருந்து எதுவுமே பிரிக்க முடியாது. அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகி, இனி ஒரு போதும் பிரிக்கப்பட முடியாத நிலையை அடைகின்றனர். அவன் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்து ஒருபோதும் ஆக்கினைக்குள்ளாக மாட்டான். என்னே ஒரு வாக்குத்தத்தம், ஆண்டவரே! எங்கள் ஆத்துமாவை நாங்கள் எவ்வாறு அதில் நங்கூரமிட முடிகிறது. புயல் எவ்வளவு வேகமாக அடித்தாலும், அலைகள் எவ்வளவு முரணாக இருந்தாலும், எங்கள் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே! ஓ, கர்த்தராகிய தேவனே. இவர்களை இன்றிரவு எடுத்து, உமது இரக்கத்துக்குள்ளும் பாதுகாப்புக்குள்ளும் வைத்துக் கொள்வீராக. எல்லா புத்திக்கும் மேலான சமாதானம் இவர்களுடைய இருதயங்களுக்குள் பிரவேசிக்காமல் இன்றிரவு இவ்விடத்தை விட்டு இவர்கள் போகாதிருப்பார்களாக. அவர்கள் கையுயர்த்தின பின்பு, என் சத்தத்தை உம்மிடம் உயர்த்தி, “ஓ, தேவனே, கிருபையாயிரும்” என்று உம்மை நோக்கிக் கூப்பிடுவதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்? பிதாவே, இதை அருளும். 17இத்தனை ஆண்டுகளாக, நான் உலகம் முழுவதிலும் சுவிசேஷ ஊழியத்தை செய்து வந்தபோது, என் உயிரைக் காத்து வந்திருக்கிறீர். உம்மை அறியாதவர்கள் அவர்களுடைய வாழ்க்கை பாதையின் முடிவுக்கு வரும்போது இரக்கத்துக்காக அலறுவதை நான் கண்டிருக்கிறேன். உம்மை அறிந்தவர்கள் தங்கள் வாழ்க்கை பாதையின் முடிவுக்கு வந்து, “இன்ப நாள், இன்ப நாள், இயேசு என் பாவத்தைக் கழுவின நாள்” என்று பாடுவதையும் நான் கண்டிருக்கிறேன். ஆமாம். துன்மார்க்கர் அநேக சமயங்களில் பச்சை மரத்தைப் போல் தழைக்கின்றனர். ஆனால் அவன் வாழ்க்கை பாதையின் முடிவுக்கு வரும்போது, அது வித்தியாசமாயுள்ளது. எங்கள் மத்தியில் இன்றிரவு பொல்லாதவர் ஒருவர் கூட இராமல் போகட்டும். அவர்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதாக. இங்குள்ள ஒவ்வொருவரும் தேவனிடத்திலிருந்து புத்துணர்ச்சியையும் புதுமையையும் பெறுவார்களாக. பிதாவே, நீர் எங்களுக்கு விட்டுச் சென்ற அந்த பரிசுத்த புனித ஒழுங்காகிய இராபோஜனத்தை உட்கொள்ளவிருக்கிறோம். “இது உனக்காக பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. இது புது உடன்படிக்கைக்குரிய இரத்தமாக, ஆசீர்வாதங்கள் நிறைந்த பாத்திரமாயிருக்கிறது. இதை புசித்துப் பானம் பண்ணும் போதெல்லாம், கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.” தேவனே, நீர் வருவீரென்று விசுவாசிக்கிறோம். அந்த மகத்தான மகிமையுள்ளவராகிய இயேசு வருவார். அவரை நாங்கள் காண்போமென்று விசுவாசிக்கிறோம். அப்பொழுது வயோதிபம் மறைந்து விடும்; துயரம் மனோவேதனை, வியாதி எல்லாமே மறைந்து போகும். அந்த மகத்தான புதிய நாளில், கர்த்தாவே, நாங்கள் “ராஜா சிங்காசனத்தில் உட்காரும்போது, மகிழ்ச்சியான ஓசன்னாக்களோடு குருத்தோலைகளை ஆட்டி”, வெற்றியின் குரலை எழுப்பி ஆர்ப்பரிப்போம். 18இன்றிரவு உமது வார்த்தையினால் எங்களைத் தேற்றும். ஆறுதலளிப்பவைகளை எங்களிடம் பேசும், அது எங்கள் இருதயங்களைத் தேற்றும். என் அம்மாவுக்காக ஜெபிக்கிறேன். தேவனாகிய கர்த்தாவே, அவர்கள் நான் அறிந்துள்ள என் ஒரே தாய். மனைவி எவ்வளவு இனிமையாக இருந்தாலும், அவள் எப்படியும் அம்மாவின் ஸ்தானத்தை எடுத்து கொள்ள முடியாது. கர்த்தாவே, வேர்கள் நிலத்தில் ஆழமாகச் சென்று படர்ந்து நிற்கும் அந்த கர்வாலி மரத்தினிடம் நான் சென்று, அவர்கள் அருகில் உட்கார்ந்து அவர்களுடன் உரையாடுவதுண்டு. தேவனே, அவர்களை கஷ்டப்பட வைக்காதேயும். அவர்கள் அவதியுறுவதைக் காணும்போது, கர்த்தாவே, அது என் இருதயத்தைப் பிளக்கிறது. அவர்கள் பொல்லாப்புக்குப் பயப்படாமல், மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்து செல்லும்படி செய்யும். உமக்கு நான் எவ்வளவாக நன்றி சொல்லுகிறேன்! சற்று முன்பு அவர்கள் தங்கள் பெயரையும் கூட அறியாதிருந்த நிலையில், நான் “இயேசு” என்று சொன்ன போது, அவர்கள் தலை அசைத்தார்கள், அவர்கள் அவரை அறிந்திருந்தார்கள். கர்த்தாவே, அதற்காக உமக்கு நான் எவ்வளவாக நன்றி சொல்லுகிறேன்! மருத்துவர், “அவர்கள் நினைவு இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை” என்று கூறினார். இவ்வுலகிலுள்ள ஒன்றையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த போதிலும், கர்த்தாவே, அவர்கள் உம்மை அறிந்து கொண்டார்கள். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அது என் ஆத்துமாவை இளைப்பாறச் செய்கிறது. என் தாயார் இவ்வுலகை விட்டுச் செல்வதைக் குறித்து என்னிடம் நீர் ஒன்றுமே கூறவில்லை. கர்த்தாவே, அதைக் குறித்து நீர் என்னிடம் கூற வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் கர்த்தாவே, எனக்குத் தெரிந்தால் நலமாயிருக்கும். நான் வேண்டிக் கொள்கிறேன், நீர் தாமே... அது என்னவானாலும், கர்த்தாவே, அதை உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக. இப்பொழுதும் பிதாவே, உமது வார்த்தைகளை இன்றிரவு ஆசீர்வதியும் செய்தியை, படிக்கும் வேதபாகத்தையும், பாடும் பாடல்களை, உட்கொள்ளப் போகும் இராப்போஜனத்தை, இவையனைத்தும் உமது கனத்துக்கென்றும் மகிமைக்கென்றும் செய்யப்படுவதாக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 19ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டிய சில உறுமால்கள் இங்குள்ளன. சிறிது கழித்து, நாம் ஜெபிக்கும்போது, அவைகளுக்காக ஜெபிப்போம். இன்றிரவு நாம் வேத வசனத்தைப் படிக்க வேதாகமத்தைத் திருப்புவோம். என்னால் முடிந்த வரைக்கும் வேகமாக முடிக்க முயற்சி செய்வேன். ஏனெனில் நான் மருத்துவமனைக்கு செல்வதற்காக, அங்கு சிலர் களைப்போடு தாயாரின் அருகில் உட்கார்ந்து கொண்டு காத்திருக்கிறார்கள். 20நான் பரி. யோவான் சுவிசேஷம் 14-ம் அதிகாரத்திலிருந்து படிக்க விரும்புகிறேன்... நாம் 12-ம் வசனத்திலிருந்து தொடங்குவோம். இன்றிரவு நான் பேசவிருக்கும் பொருள் “தேற்றரவாளன்” என்பது. நாம் படிக்கும் போது உன்னிப்பாக கவனியுங்கள். பரி. யோவான் சுவிசேஷம் 14-ம் அதிகாரம் 12-ம் வசனம் முதல். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக் கொள்ளுங்கள். நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூடி இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது. அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான். 14 :12-17 என்னை நீங்கள் மன்னிப்பீர்களானால், நான் 17-ம் வசனத்தை மறுபடியும் படிக்க விரும்புகிறேன். உலகம் அந்த சத்திய ஆவியானவரை பெற்றுக் கொள்ளமாட்டாது. “உலகம் நீங்கள் உலகத்தில் அன்பு கூருகிற வரைக்கும் அதை பெற்றுக் கொள்ளமாட்டீர்கள். பாருங்கள்? ...காணாமலும் இருக்கிறபடியால்... அவர் என்ன செய்த போதிலும், உலகம் அதைக் காண்பதில்லை. அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை. பாருங்கள், அவர்களுக்கு அது “உணர்ச்சிவசப்படுதல், மனோதத்துவம்...” அவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால்... இப்பொழுது கவனியுங்கள், அவர் குறிப்பிடும் “அவர்” யாரென்பதை. அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். 21அது வெளிப்படையாய் உள்ளதல்லவா? அப்படியானால் இந்த தேற்றரவாளன் யார்? இயேசு. பாருங்கள்? அவர், “நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன் அப்பொழுது சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும்... பாருங்கள், காணாமலும்... அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது. ஆனால் நீங்கள் அவரை அறிவீர்கள்” என்றார். பாருங்கள், அவர் தம்மைக் குறித்துப் பேசுகிறார். அவர் உங்களுடனே இப்பொழுது மாம்ச சரீரத்தில் வாசம் பண்ணி, அவர் சீஷர்களிடம் பேசுகிறார், “உங்களுக்குள்ளே இருப்பார்; அவர் என்றென்றைக்கும் தங்கியிருப்பார், விட்டுப் போக மாட்டார்” என்றார். ஓ, “அவர் நல்ல தேவன் அல்லவா? இயேசு நமக்கு மிகவும் நல்லவராக இருக்கிறார்”. “நம்முடைய தேவன் நல்ல தேவன்” என்று மிகவும் அழகாக கூறப்பட்டுள்ளது. அவர் தம் பிள்ளைகளுக்கு மிகவும் நல்லவராக இருக்கிறார்! அவர் நன்மையான எல்லாவற்றையும் நமக்கு அளித்திருக்கிறார். நமக்குத் தேவையான அனைத்தும் அவர் நமக்குத் தந்திருக்கிறார். நீங்கள் உண்மையாக, “பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே” என்று கூற முடியும். ஏனெனில் அவர் நமக்குப் பிதாவாயிருக்கிறார். நாம் கீழ்படியாமல் இருந்த போதிலும், கர்வம் பிடித்தவர்களாக இருந்த போதிலும், அவர் நமக்குத் தருகிறார். நாம் நல்லவர்களாயிருந்தாலும், தீயவர்களாயிருந்தாலும், அவர் நமக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், தங்குவதற்கு வீடும் தருகிறார். ஓ, அவர் மிகவும் நல்லவர். 22நாம் மாத்திரம் சுற்றிலும் நோக்கி, அவர் நமக்கு அளித்துள்ள நன்மையான காரியங்களை எண்ணிப் பார்ப்போமானால்! அதை நாம் யோசித்துப் பார்ப்பதேயில்லை. நமக்கு கண்கள் இல்லையென்றால் என்ன செய்திருப்போம். நமக்கு மூக்கு, வாய், காதுகள் இல்லையென்றால் என்ன செய்திருப்போம்? உங்களுக்கு கால்கள் இல்லையென்றால் நீங்கள் நடக்க முடியாது. ஆனால், நீங்கள்... ஆனால், பாருங்கள், அவர் உங்களுக்கு கால்களைக் கொடுத்திருக்கிறார். உங்களுக்குக் கண்கள் இல்லையென்றால் உங்களால் காண முடியாது. உங்களால் சத்தங்களைக் கேட்க முடியும், ஆனால் அவை என்னவென்று உங்களால் காணமுடியாது. இவையனைத்தும் அவர் அளித்துள்ள ஐம்புலன்கள் செயல்படுவதனால் உண்டாகின்றன. நாம் மாத்திரம் அவரிடம் நெருங்கி ஜீவித்தால், அவர் வேறொன்றை நமக்களிக்கிறார். மனக்கண் (insight) என்று ஒன்றுண்டு. சாதாரண மக்கள் காணக் கூடாததை அதன் மூலம் நாம் காணலாம். நாம் மறுபடியும் பிறக்கும் போது, அவரைக் காண்கிறோம். பாருங்கள்? “நீங்கள் அவரை அறிவீர்கள். நீங்கள் அவரைக் கண்டிருக்கிறீர்கள். அவர் உங்களுடனே என்றென்றைக்கும் வாசம் பண்ணுவார்”. ஓ, அவர் நல்ல பிதா. அவர்... அவர் நன்மையின் ஊற்று, எல்லா நன்மைக்கும் மகத்தான காரணர். நமது தேவனில் பிதாத்துவம் உள்ளது. அவர் தம்மை விசுவாசிக்கும் பிள்ளைகளுக்கு மிகவும் நல்லவராயிருக்கிறார். ஆனால் இப்பொழுது ஒருக்கால்... 23அவர் நமக்கு அளித்துள்ள ஒன்று, சூரிய வெளிச்சம். ஓ, எப்படி அது... நாம் சூரிய வெளிச்சமில்லாமல் உயிர் வாழ முடியாதென்று உங்களுக்குத் தெரியும். சிறிது காலம் கூட நாம் உயிர் வாழ முடியாது. ஏனெனில் ஒன்றுமே வளராது. சூரிய வெளிச்சம் மிகவும் முக்கியமானதும் தேவையானதுமாகும். இருப்பினும் நாம் அதைக் கண்டு, “ஓ, அது சூரியன்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம். பாருங்கள், அதன் முக்கியத்துவத்தை உணராமல் விட்டுவிடுகிறோம். ஆனால் அந்த சூரிய வெளிச்சம் நமது வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அது நமக்குதவி செய்து, பெலனை அளிக்கிறது. அது இயற்கை மனிதனுக்கு. பிறகு நாம் வாழ வேண்டிய ஆவிக்குரிய சூரிய வெளிச்சம் ஒன்றுண்டு. இயற்கை அனைத்துமே ஆவிக்குரியவைகளுக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. நாம் மேசையில் உண்ணும் நல்ல ஆகாரம், வார்த்தையிலிருந்து நாம் புசிக்கும் நல்ல ஆகாரத்துக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. பாருங்கள், அது ஒரு எடுத்துக்காட்டு. மாம்சப் பிரகாரமான பாகம், ஆவிக்குரிய பாகத்தின் வெளிப்புற தோற்றமாயுள்ளது. நமக்கு ஆவிக்குரிய பாகமே மாம்சப் பிரகாரமான பாகத்தைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது. பாருங்கள்? 24அது ஒரு குழந்தை போன்றது. குழந்தை தாயின் கருவில் உருவாகும் போது, அது மாம்சமும் இரத்தமும் உள்ளதாய், குதித்து உதைக்கிறது. ஆனால் அது பிறக்கும் போது, நீங்கள் காண முடியாத ஒரு ஆவியும் ஒரு ஆத்துமாவும் தாயின் அருகே தொங்கிக் கொண்டு, அது பிறந்தவுடனே அதற்குள் நுழையக் காத்திருக்கிறது. குழந்தை இவ்வுலகில் பிறதவுடனே அதற்குள் நுழைந்து கொள்ள தேவன் ஒரு ஆத்துமாவையும் ஒரு ஆவியையும் சிருஷ்டித்திருக்கிறார். அந்த குழந்தை வளர்ந்து கற்கத் தொடங்கும் போது. அது ஜீவாத்துமாவாகி, நன்மை தீமை இன்னதென்று அறிகிறது. அப்பொழுது அதற்கு முன்னால், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருந்தது போல, நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் வைக்கப்படுகிறது. அது இரண்டில் ஒன்றை தெரிந்து கொள்கிறது. பின்பு அது அறிவாளியாகிறது. அது வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அது தேவனுடைய மகத்தான திட்டம். முடிவில் அது வாழ்க்கை பாதையின் முடிவுக்கு வருகிறது. இந்த மாம்ச சரீரம். இந்த சரீரம் மெல்ல மெல்ல அழிந்து மறைந்து போகும்போது, அதை ஏற்றுக் கொள்ள ஒரு சரீரம் ஆயத்தமாய் உள்ளது. நமக்குள் இப்பொழுதுள்ள ஆத்துமாவும் ஆவியும் இந்த சரீரத்தை விட்டு வெளியேறினவுடனே, அது வேறொரு சரீரத்துக்குள் செல்கிறது - வாலிப சரீரம், நல்ல சரீரம், மறைந்து போகாத சரீரம். ஏன்? அவர் நல்ல தேவன்! நிச்சயமாக அவர் நல்லவர். 25இப்பொழுது, உதாரணமாக, சூரிய வெளிச்சத்தை அறிந்துள்ள ஒரு மனிதன், அதை ஏற்றுக் கொள்ள மறுத்து, “நான் அதை நம்ப மாட்டேன்” என்று சொல்லி, அடித்தளத்துக்கு சென்று கதவை மூடிக்கொண்டு, சூரியன் பிரகாசிக்கிறது என்பதை ஏற்க மறுத்து, “நான் நம்ப மாட்டேன்” என்று கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். யாராகிலும் ஒருவர், “ஓ, அதன் வெப்பம் ஆரோக்கியத்தை அளிக்கிறது. சூரிய வெளிச்சத்தில் வாழும் மக்கள் நிறமுடையவர்களாய், மற்றவர்களைக் காட்டிலும் ஆரோக்கியமுள்ளவராயிருக்கின்றனர்” என்று கூறுவதைக் கேட்காமல், “அதை நான் நம்பமாட்டேன்” என்று சொல்லி, அறைக்குள் அடைந்து கிடந்தால், அவனுடைய நிலைமை பரிதாபமே. ஒரு மனிதன் அவ்வாறு செய்தால் அவனுடைய மூளைக்கு ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. 26அது போன்று ஒரு மனிதன் தேவனுடைய ஆவிக்குரிய சூரியன், சூரிய வெளிச்சத்திலிருந்து தன்னைஅடைத்துக் கொள்வானானால், அவனுடைய ஆவிக்குரிய நிலையில் ஏதோ தவறுள்ளது. ஒரு மனிதன் நமக்கு ஆறுதலும் பெலனுமாயுள்ள நல்ல தேவனின் வழி நடத்துதலில் நடக்க மறுப்பானானால்!அவருடைய சூரிய வெளிச்சத்தில் வாழ்வது நமக்கு ஆவிக்குரிய வளாச்சியை அளிக்கிறது. குமாரனின் சூரிய வெளிச்சத்தில் அவருடைய மகிமையின் பிரகாசத்தில் வாழ்வது ஆவிக்குரிய பெலனை அளிக்கிறது. தேவனுடைய மகிமையின் பிரகாசத்தில் வாழ்வது நமக்கு கிடைக்கப் பெற்ற மிகப் பெரிய சிலாக்கியம் எனலாம். அந்த நல்ல, ஆரோக்கியமுள்ள கிறிஸ்தவர்களைப் பாருங்கள்! 27தன்னை அடித்தளத்தில் மறைத்துக் கொண்டு தேவன் இயற்கையில் அருளியுள்ள சூரிய வெளிச்சத்தைக் காணவும், அது உள்ளதாக விசுவாசிக்கவும் மறுக்கும் மனிதன் அல்லது ஸ்திரீயை எடுத்துக் கொள்ளுங்கள். அவனுடைய தன்னயம் காரணமாக அவன் தன்னை அடைத்துக் கொள்கிறான். அவனுக்கு விரைவில் சோகை பிடித்து, வெளுத்து காணப்படுவான். அவனுக்கு நல்ல பெலன் இருக்காது. அவனுக்கு நல்ல ஆரோக்கியம் இருக்காது. அவன் விரைவில்... ஏனெனில் தேவன். அவனுக்கு அளித்திருந்த அந்த சிலாக்கியத்தை அனுபவிக்காமல், அவன் தன்னை அடைத்துக் கொண்டான். அது உண்மை. அவன் அதை வேண்டுமென்று செய்தான். நாமும் நம்மை தேவனுடைய மகிமையிலிருந்து. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலிருந்து அல்லது ஆவியின் ஐக்கியத்திலிருந்து அடைத்துக் கொள்வோமானால், முதலாவதாக என்ன நடக்கும் தெரியுமா , நாம் வெளுத்துப் போய், வியாதிப்பட்ட கிறிஸ்தவர்களாகிவிடுவோம். நமது அனுபவம் குன்றி மங்கலாகிவிடுகிறது. மகத்தான போராட்டங்கள் வரும் போது, அதை சந்திக்க மனதில்லாமல் பின் வாங்கிப் போகிறோம். தேவனுடைய சூரிய வெளிச்சத்தில் வாழ்ந்த போர் வீரன் அதற்கு அவசியம். அதற்கு தேவனை அறிந்த ஆவி அவசியம். அப்படிப்பட்டவர் சிறிதளவும் சந்தேகமின்றி தொல்லையின் மத்தியில் நின்றுகொண்டு, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” என்று ஆர்ப்பரிக்க முடியும். அல்லேலூயா! அது தான், பாருங்கள். 28நம்மை அடைத்துக் கொள்கிறோம். அவர்கள் அதை இயற்கையாகவே செய்கின்றனர். நாமோ அதை வேண்டுமென்று செய்கிறோம். ஆனால் தேவன் நல்லவராயிருக்கிறார். அவர் நமக்குத் தருகிறார். ஆனால் இன்று அநேகருக்கு தேவனுடன் அந்த ஆரோக்கியமான இடத்தை அடைந்து, ஆரோக்கியமான ஆவியைக் கொண்டவர்களாய், ஆரோக்கியமான கிறிஸ்தவர்களாய் இருக்க மனதில்லை. நீங்கள் நிச்சயம் ஆரோக்கியமான தேகத்தை பெற்றிருக்க விரும்புவீர்கள், யாருக்குமே அந்த விருப்பம் இருக்கும். ஆயினும், நீங்கள் எவ்வளவு தான் உங்கள் தேகத்தில் ஆரோக்கியத்தை திணித்தாலும், அது மறுபடியும் மண்ணுக்குத் திரும்ப வேண்டும். ஆனால், ஓ, என் சகோதரனே, அந்த ஆத்துமா மிக அதிக ஆரோக்கியமான நிலையை அடைய முடியாது. அது ஒவ்வொரு முறையும் வளர வேண்டும். அது தேவனுடைய பெலத்திலும் கிருபையிலும் வல்லமையிலும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். நாம் தேவனுடைய சூரிய வெளிச்சத்தில் நடக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அவர் நல்லவராயிருக்கிறார். 29நமக்கு ஒரு பெரிய சுதந்தரம், ஒரு மகத்தான புனித பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, ஆரோக்கியமான ஆவியைப் பெற்று பெலமுள்ள கிறிஸ்தவர்களாக இருக்க நீங்கள் சூரிய வெளிச்சத்தைக் குறித்து தேவனுடைய மகிமையின் மகத்தான சூரிய வெளிச்சத்தைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர்களே என்று வியக்கலாம்”, அவைகளை எப்படி பெற்றுக் கொள்வது? அவை எங்கிருந்து வருகின்றன? அவை என்ன? அது என்னவென்று எனக்குக் காண்பியும், சகோ. பிரான்ஹாமே, அதை நான் மருந்துக் கடையில் வாங்கிக் கொள்ள முடியுமா? அது எப்படிப்பட்ட விட்டமின் என்னும் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் விடை காணவே இன்றிரவு நாம் இங்கு வந்துள்ளோம். நீங்கள் அதை மருந்துக் கடையில் வாங்க முடியாது. ஆனால் உங்களுக்கு மாத்திரம் அதை பெற்றுக் கொள்ள மனதிருந்தால், அது ஏராளமாக உங்கள் அருகிலேயே உள்ளது. அதை எப்படி பெற்றுக் கொள்வது என்னும் சூத்திரத்தை மாத்திரம் அறிந்திருக்க வேண்டும். மருந்துக் கடையில் மருந்துகள் உள்ளன. ஆனால் வியாதி என்னவென்று கண்டு பிடிக்க ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். அவர் கண்டு பிடிக்கவில்லையென்றால், அது உங்களைக் கொன்றுவிடும். எனவே வியாதி என்னவென்று கண்டுபிடித்தாக வேண்டும். நீங்கள் பாவியைக் கொண்டு போய் அவனுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்க முடியாது. அவன் முதலில் மனந்திரும்ப வேண்டும். அவன் பாவங்களற கழுவப்பட வேண்டும். அவனுக்கு கொடுக்கப்படவிருக்கும் இந்த மகத்தான விட்டமினைப் பெற்றுக் கொள்ள அவன் ஆயத்தமாயிருக்க வேண்டும். 30நமக்கு ஒரு புனிதமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொறுப்பு என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். நமக்கு ஒரு சுதந்தரம் அளிக்கப்பட்டுள்ளது. நாம் விசுவாசிக்கும் பிள்ளைகளாக அதை சுதந்தரித்துக் கொண்டிருக்கிறோம். அது புனிதமான பொறுப்பு. அந்த புனிதமான பொறுப்பும், நமது புனிதமான சுதந்தரமும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய முழு வார்த்தையே. வார்த்தையே விட்டமின்... வார்த்தையே, தேவனுடைய வார்த்தையே. ஆகையால் தான்... இந்த வார்த்தையில் நிலைத்திருக்கும் விஷயத்தில் நான் மிகவும் பிடிவாதமுள்ளவனாயிருக்கிறேன் அதை பிடிவாதம் என்று அழைக்க விரும்புகிறேன். யார் என்ன கூறினாலும், அது வார்த்தையுடன் ஒத்து போகாமலிருந்தால், அதை நான் நம்பமாட்டேன். பாருங்கள், நீங்கள் நம்ப விரும்பினால், அது உங்களைப் பொறுத்தது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில், வார்த்தையே முக்கியம் வாய்ந்தது. ஏனெனில், “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை” (மத். 24:35). எனவே அந்த வார்த்தையே முக்கியம் வாய்ந்தது. 31நான் வார்த்தையினால் பிழைத்திருக்கிறேன். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்று இயேசு கூறினார் (மத். 4:4). இதுவே அது! அது நமக்கு சுதந்திரமாக அளிக்கப்பட்டுள்ளது. வார்த்தை நமது சுதந்தரம். ஓ தேவனே, நாங்கள் அதைக் குறித்து ஆழமாகச் சிந்திக்கும்படி செய்வீராக. அது நமது சிலாக்கியம். அது தேவன் தமது சபைக்கு ஒப்படைத்துள்ள புனிதமான பொறுப்பு. தேவன் தமது வார்த்தையை தமது சபைக்கு அளித்துள்ளார். அந்த புனிதமான சுதந்திரம் நமக்குரியது. அது தேவனிடத்திலிருந்து வந்த ஈவு. நமது சுவைக்கு ஏற்றவாறு இதன் மேல் ஒப்புரவாகி, இதை விலக்கிப் போட்டு, இதை தூர எறிந்து, இதை சேர்த்துக் கொள்வதல்ல; முழு வார்த்தையை, முழு சுவிசேஷத்தை பிரசங்கிப்பதே அது. கிறிஸ்தவர்கள் என்னும் முறையில் அதை ஏற்றுக் கொண்டு அதை விசுவாசிப்பதற்கு நாம் கடமைப்பட்டவர்களாயிருக்கிறோம். நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக் கொள்கிறோம் (யோவான். 3:21). “நமக்குரிய சுதந்தரத்தை நாம் கடந்து செல்வோமானால்; நம்முடைய சபை, இதை இன்று விசுவாசிக்க வேண்டாம். இது இந்நாளுக்குரியதல்ல” என்று கூறுவதன் காரணமாக அதை கடந்து செல்வோமானால், நமது சுதந்தரத்தை நாம் பாழாக்கிவிடுகிறோம். 32நாம் எல்லோரும் அமெரிக்கர்கள். இன்றிரவு சபைக்கு வந்துள்ள அனைவரும் அமெரிக்கர்கள் என்று நினைக்கிறேன். நாம் அனைவரும் அமெரிக்க குடிமக்கள். நாம் அமெரிக்கர்களாயிருப்பதால் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆனால் நமது அமெரிக்க சுதந்தர வீதத்துக்கு சம்பவித்தது என்ன? அது என்ன? நாம் ஒப்புரவாகத் தொடங்கினோம். நாம் ஒப்புரவாகத் தொடங்கின முதற்கொண்டு, அதன் காரணமாக நமது சுதந்தர வீதத்தின் புனிதத் தன்மையை இழந்துவிட்டோம். நாம் நான்கு முறை ஜனாதிபதிகளை தேர்ந்தெடுத்தோம், அது நமது அரசியல் சட்டத்தை முறித்துப்போட்டது. தெருக்களில் காரை நிறுத்த செலுத்த வேண்டிய கட்டணத்தை நிர்ணயிக்கும் மீட்டர்களை பொருத்தியுள்ளது சட்ட விரோதமானது. அப்படி அரசியல் சட்டத்தில் எழுதி வைக்கப்படவில்லை. அது சட்ட விரோதமாய் இருந்தபோதிலும், அதை நாம் செய்கிறோம். இந்த நாடு அடிப்படையாகக் கொண்டுள்ள கொள்கைகளுக்கு விரோதமாக நாம் எல்லாவற்றையும் செய்கிறோம். நாம் எல்லாவற்றையும் மாறாக செய்கிறோம். எனவே நமது சுதந்தர வீதத்தை நாம் இழந்துவிட்டோம். ஏன்? அடிப்படையான கொள்கைகளின் பேரில் நாம் ஒப்புரவாகிவிட்டோம். 33கிறிஸ்தவர்கள் என்னும் முறையில், தேவனுடைய வார்த்தை ஒன்றின் பேரிலும் நாம் ஒப்புரவாகாதபடிக்கு தேவன் எனக்கும் உங்களுக்கும் உதவி செய்வாராக. இந்த புனிதமான பொறுப்பு சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சுவிசேஷத்தை - முழு சுவிசேஷத்தை - எந்த விதத்திலும் ஒப்புரவாகாமல் பிரசங்கிப்பதென்பது மகிமையான செயலே. அது எழுதப்பட்டுள்ள விதமாகவே வாழுங்கள். என்ன ஒரு புனிதமான பொறுப்பு! இந்த வார்த்தை நிறைவேற வேண்டுமென்று நாம் எதிர்பார்த்தால்; தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுவார் என்று நாம் எதிர்பார்த்தால், தேவன் எழுதின விதமாகவே அதில் நீங்கள் நிலைத்திருப்பீர்களானால், உங்களுக்கு எல்லாவிதமான காரியங்களும் சம்பவிக்கும், ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும். 34ஒரு அசைக்கும் வல்லமை வருவதைக் காண நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது வரும்போது, நாடுகளை அசைக்கும். தேவனுடைய வார்த்தையின் பேரில் எக்காரணத்தைக் கொண்டும் ஒப்புரவாகாமல், காலங்கள் தோறும் உள்ள கன்மலையைப் போல் உறுதியாய் நின்று, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து, தேவன் அதை ஆதரிக்கிறார் என்று விசுவாசிக்கும் மனிதனையும் ஸ்திரீயையும் அவர் பெறுவாரானால், அவர்களை அவருடைய ஆளுகையின் கீழ் கொண்டு வருவார். வார்த்தையை விசுவாசிக்கும் மனிதன் வார்த்தையின்படி நடக்க வேண்டும். நீங்கள் வார்த்தையின்படி நடக்காவிட்டால், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை. நீங்கள் அதை விசுவாசித்தால், அதன்படி நடவுங்கள்! அதை நீங்கள் கிரியை செய்ய வைப்பீர்கள். வார்த்தை உங்களுக்குள் இருக்கும். 35நாம் ஒப்புரவானதன் காரணத்தால், நமது சுதந்தரத்தை நாம் இழந்துவிட்டோம். நாம் ஒப்புரவானால், தேவன் தமது வாக்குத்தத்தை நமக்கு நிறைவேற்றி தருவாரென்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் தேவன் நமக்களித்துள்ள அந்த புனிதமான பொறுப்பை நாம் முறித்து போட்டு, அதை கறைப்படுத்திவிட்டோம். அந்த பொறுப்பை நாம் காத்துக் கொள்வோம்; அதை புனிதமாக, பரிசுத்தமாக வைத்துக் கொள்வோம். நீங்கள் எவ்விதத்திலும் ஒப்புரவாகாமல் ஒவ்வொரு வார்த்தையும் கைக் கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதை விசுவாசியுங்கள். அதன்படி நடவுங்கள்! அதன் மேல் உறுதியாய் நில்லுங்கள்!அசையாதீர்கள்! அதை தான் நாம் செய்ய வேண்டும். அதை தான் தேவன் எதிர் பார்க்கிறார். இன்று காலை நான் அளித்த செய்தியில் கூறினது போன்று, “நமக்கு ஏற்றதாயிருக்கிறது”, அல்லது “எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது”, என்னும் பொருளின் பேரில் இன்று காலை நமது செய்தியில் கூறினது போன்று வார்த்தை அளிக்கப்பட்டுள்ள நமக்கு அது கடமையாயிருக்கிறது. வார்த்தையில் நிலைத்திருப்பது நமக்குள்ள கடமை. அதில் நாம் நிலைத்திருக்கும் போது, தேவன் நமது மத்தியில் கிரியை செய்வதை நாம் காண்போம். எனவே அதில் நிலைத்திருப்பது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. அது தேவன் நமக்களித்துள்ள சுதந்திரம். 36சிறிது நேரம் நாம் முன்காலத்துக்குச் சென்று, தேவனுடைய மகத்தான, புனிதமான பொறுப்பை காத்துக் கொண்ட மனிதர்களைக் காண்போம். அது அவருடைய வார்த்தை. அவருடைய வார்த்தையை தான் நாம் சுதந்தரிக்கிறோம். இறுக்கமான நேரத்தின் போது, கலக்கமுற்ற நேரத்தின் போது, துயரமுள்ள நேரத்தின் போது, ஆபத்தான நேரத்தின் போது, அவர்கள் வார்த்தையைக் கைக் கொண்டதன் மூலம் ஆறுதல் அடைந்தார்கள். தேவனுடைய வார்த்தை நம்மை தேற்றுகிறது. நீங்கள் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடக்கிறீர்கள் என்றும், தேவன் அவ்வாறு கூறியுள்ளார் என்றும் நீங்கள் அறிந்துள்ள போது, அத்துடன் அது முடிவு பெறுகிறது. தேவன் அவ்வாறு கூறினார்! நீங்கள், “போதகர் அவ்வாறு கூறினார்” அல்லது, “சபை அவ்வாறு கூறினது” என்று சொல்ல முடியாது. நீங்கள், “தேவன் அவ்வாறு கூறினார்” என்று சொல்லலாம். அது தான் நாம் அடையும் ஆறுதல். அங்கு தான் நான் ஆறுதலை அடைகிறேன், அங்கு தான் நீங்களும் உங்கள் ஆறுதலைப் பெறுகிறீர்கள், தேவன் அவ்வாறு கூறினார் என்பதில் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். இதை விசுவாசிக்கிறாயா பாருங்கள், அது ஆறுதல்படுத்துகிறது. இதில் நாம் ஆறுதல் பெறுகிறோம். 37நோவா, இன்று காலை அவனைக் குறித்துப் பேசினேன் என்று நினைக்கிறேன். குறை கூறுவதன் மத்தியில் அவனுக்கு கிடைத்த ஆறுதல்! நிச்சயமாக. “உலகம் அவரை அறியாமல் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது” என்று இயேசு கூறினார். ஆனால் நீங்கள் அவரை அறிவீர்கள். நீங்கள் அவரைக் கண்டிருக்கிறீர்கள். அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பார்.“ நோவா தேவனைச் சந்தித்திருந்தான். அவன் தேவன் சொல்வதைக் கேட்டான். அவன் தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். மற்றவர் என்ன சொன்னாலும் கவலையில்லை. நோவா தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். அது அவனுக்கு ஆறுதலை அளித்தது. குற்றம் கண்டு பிடிப்பவர்கள் தோன்றி, அவர்கள் செய்வதையே செய்து கொண்டிருந்தனர் அதாவது அவனைக் குறை கூறிக் கொண்டிருந்தனர். விஞ்ஞானமும், ஆகாயத்தில் தண்ணீர் இல்லாதபோது, அது எப்படி கீழே விழ முடியும்? அங்கு தண்ணீர் இல்லையென்று எங்களால் நிரூபிக்க முடியும். நோவா, நீ ஒரு மூட மதாபிமானி. நீ மூட மதாபிமானி என்று நாங்கள் நிரூபிக்க முடியும். இங்கே பார்! தண்ணீர் எங்கேயுள்ளது? எனக்குக் காண்பி என்றது. இன்றுள்ளது போல் அன்று 2 கோடி ஒளி ஆண்டுகள் தூரம் காணக் கூடிய தூரதரிசினி அவர்களுக்கு இருந்திருக்கக் கூடும். அதுவரை மழை பெய்யவேயில்லை என்று உங்களுக்குத் தெரியும். ஆயினும் நோவா தேவனுடைய வாக்குத்தத்தத்தை உடையவனாயிருந்தபடியால் அவன் ஆறுதலடைந்தான். ஆமென். 38அவன் என்ன செய்தான்? அவன் பேழையை உண்டாக்கிக் கொண்டே சென்றான். “எவ்வளவு புத்தியீனமான செயல்!” அங்கு ஒருக்கால் படகு இருந்திருக்காது. அந்நாட்களில் குளங்கள் அல்லது. ஆறுகள் இருந்திருக்காது. எனவே அவர்களுக்கு படகு அவசியமிருக்கவில்லை. ஆனால் இவனோ இங்கு விசித்திரமாகக் காணக் கூடிய ஒன்றை உண்டாக்கிக் கொண்டிருக்கிறான். எல்லோருமே அவனைக் கேலி செய்கின்றனர். அவனுடைய உற்சாகத்தை தடை செய்ய அது போதுமானதாயிருந்தது. எல்லோருமே அங்கு வந்து, “மலையின் மேலுள்ள அந்த பைத்தியக்காரனைப் பாருங்கள். அவன் வீடு போன்ற ஒன்றை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொருள் என்ன? அது எப்படிப்பட்ட ஒரு பொருள்? அவன் எதைக் கொண்டு உண்டாக்குகிறான் பாருங்கள்! அது மூடத்தனம்” என்று சொல்லியிருப்பர்கள். இருப்பினும் நோவா தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தபடியால் ஆறுதல் அடைந்தான். தேவன் அவ்வாறு உரைத்திருந்தார், அதுவே ஆறுதல். ஆமென். தேவன் ஒன்றை உரைத்தால், அத்துடன் அது முடிவு பெறுகிறது. தேவன் அவ்வாறு உரைத்தார்! “மழை பெய்யப் போகிறதென்று உனக்கு எப்படித் தெரியும்?”. “தேவன் அவ்வாறு உரைத்தார்”. “மேலேயிருந்து தண்ணீர் கொட்டப் போகிறதென்று உனக்கு எப்படித் தெரியும்?”. “தேவன் அவ்வாறு உரைத்தார்”. அவன் வார்த்தையின் பேரில் அத்தகைய ஆறுதலைக் கொண்டிருந்தான். 39அவனுடைய பேழையை சிறிது நேரம் கவனிப்போம். அதை அந்த விதமாக உண்டாக்கினது மூடத்தனமான செயல். நீங்கள் கவனித்தீர்களா, அவர் ஆதியாகமத்தில், “நீ கொப்பேர் மரத்தால் ஒரு பேழையை உண்டாக்கு” என்று அவனிடம் கூறினார் (ஆதி. 6:14). நீங்கள் கொப்பேர் மரத்தை ஆராய்ந்து பார்ப்பீர்களானால், அது ஏறக்குறைய 'பால்சா' (balsa) மரம் போன்றது. அது கடற்பஞ்சு (sponge) போன்று மிகவும் மிருதுவானது. அதில் நிறைய துவாரங்கள் உள்ளன. அது மரமாயுள்ள போது, அதில் சத்து இருக்கும், ஆனால் அதை நீங்கள் வெட்டும்போது, சத்து அதிலிருந்து போய்விடுகிறது. எனவே அது கடற்பஞ்சை போன்றது தவிர வேறொன்றுமில்லை. அவர், “கடினமான மரத்தால் அதை உண்டாக்காதே. காட்டத்தி மரம், அல்லது அதைப் போன்ற வேறொரு கடினமான மரத்தால் அதை உண்டாக்காதே. ஆனால் உள்ளதிலேயே மிகவும் மிருதுவான கடற்பஞ்சு போன்ற மரத்தால் அதை உண்டாக்கு” என்றார். அதை தண்ணீரில் மிதக்கவிட்டால், அது ஒரு நிமிடத்தில் மூழ்கிவிடும். அதை, “கொப்பேர் மரத்தால் உண்டாக்கு” என்றார். அதன் நீளமும் அகலமும் எவ்வளவு இருக்கவேண்டும் என்று அவனிடம் சொன்னார். அவர், “அதில் மூன்று அறைகளை உண்டாக்கு மூன்று அறைகள்” என்றார். 40என்ன ஒரு அழகான முன்னடையாளம்! நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், மூன்று அறைகள். பாருங்கள்? அவர் “ஒரு சன்னலை வை” என்றார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். சன்னல் பக்கங்களில் இல்லை, அது மேலே இருந்தது. பாருங்கள், நீதிமானாக்கப்படுதல், லூத்தர் பரிசுத்தமாக்கப்படுல், வெஸ்லி; பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அதன் பிறகு வெளிச்சம் உள்ளே பிரகாசிக்கிறது. அது நாம் உயிர் வாழ்வதற்கெனவும் அதன் வெளிச்சத்தில் நடக்கவும் தேவனால் அருளப்பட்ட சூரிய வெளிச்சம். ஆமென். கீழ் தட்டில் ஊரும் பிராணிகள் இருந்தன. இரண்டாம் தட்டில், ஆகாயத்துப் பறவைகள்; ஆனால் மேல் தட்டில் நோவாவும் அவன் குடும்பத்தினரும். வெளிச்சம் உள்ளே வருவதை அவர்களால் காண முடியும். 41அவர், “இந்த பேழையை நீ கொப்பேர் மரத்தால் கட்டி முடித்த பின்பு, அதற்கு உள்ளும் புறம்பும் கீல் பூச வேண்டும்” என்றார். ஒரு நாள் இந்த கீலைக் குறித்துப் படித்துக் கொண்டிருந்தேன். கீல் என்பது நம்முடைய தார். நாம் இரசாயனப் பொருட்களைக் கொண்டு தார் உண்டாக்கி, சாலைகளை, அமைக்கவும், ஓட்டைகளை அடைக்கவும் அதை உபயோகிக்கிறோம். ஆனால் அந்நாட்களில் அது வித்தியாசமானதாய் இருந்தது. அவர்களுக்கு 'ரோசின்' மரம் இருந்தது. அவர்கள் அந்த பச்சை மரத்தை வெட்டினர். இன்றைக்கு நாம் செய்வது போல், அவர்கள் ரோசின் பிசினை எடுப்பதில்லை. அவர்கள் ரோசின் பிசின் வெளியே வரும் வரைக்கும் மரத்தை நன்றாக அடிப்பார்கள். அதன் பிறகு அவர்கள் அந்த பிசினைக் காய்ச்சி, இந்த மிருதுவான கொப்பேர் மரத்தின் மேல் ஊற்றுவார்கள்... அதில் கடற்பஞ்சுக்கு உள்ளது போல் நிறைய துவாரங்கள் உள்ளதால், இந்த பிசின் அந்த துவாரங்களை நிறைத்துவிடும். பிசின் உறையும் போது, அந்த மரம் கடினமாகிவிடுகிறது. அதில் ஒரு ஆணி கூட உங்களால் அடிக்க முடியாது. பாருங்கள், அது பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தது. அந்த பிசின் கிறிஸ்துவைப் போன்றது. அது சபை. பாருங்கள், சபை தன்னை வெறுமையாக்கி மிருதுவாக வேண்டும். ஸ்தாபனங்கள் அனைத்தையும், உலகம் அனைத்தையும், அவிசுவாசம் அனைத்தையும் உங்களை விட்டகற்றி மிருதுவாகுங்கள். 42நம்மைக் காட்டிலும் வித்தியாசமாயிருந்த ஒருவர் அவருடைய இளம்பிராயத்திலேயே வெட்டப்பட்டார். அவர் அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டார். “நம்முடைய மீறுதல்களினி மித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்” (ஏசா. 53:5). அவருடைய ஜீவன் வெளியே ஊற்றப்படும் வரைக்கும் அவர் அடிக்கப்பட்டார் ரோசின் பிசின் வெளியே ஒழுகும் வரைக்கும் அந்த மரம் அடிக்கப்பட்டது போல. ஓ, கிறிஸ்தவன் அதில் ஊறி, அதை எவ்வளவு நன்றாக உறிஞ்சிக் கொள்ள முடியும் நீ மாத்திரம் வெறுமையாயிருந்தால். நீ முதலில் உன்னை வெறுமையாக்க வேண்டும். ஆனால் தொல்லை என்னவெனில், நம்மை வெறுமையாக்கிக் கொள்ள நாம் விரும்புவதில்லை. நமது சிந்தைகளிலிருந்தும், நமது கோட்பாடுகளிலிருந்தும், நமது பிரமாணப் புத்தகங்களிலிருந்தும் நம்மை வெறுமையாக்கி, பரிசுத்த ஆவியில் ஊறி அதை உறிஞ்சிக் கொள்வோம். பரிசுத்த ஆவி என்பது தமது வார்த்தையிலுள்ள தேவன். அப்பொழுது அது புயல்களைக் கடக்க முடியும். கடல்களில் மிதந்து செல்ல முடியும். ஏனெனில் அது மற்றெந்த மரத்தைக் காட்டிலும் கடினமாகிவிடுகிறது. அதன் இடத்தை எதுவுமே எடுத்துக் கொள்ள முடியாது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உண்டாக்கப்பட்ட பேழையின் பாகங்கள் இன்றைக்கும் அழியாமல் உள்ளன. அது அழியாமல் இருந்ததால், அதன் பாகங்களை இன்று அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது மிகவும் கடினமாக இருந்த காரணத்தால், அது நியாயத்தீர்ப்பு உள்ளே நுழையாதபடிக்கு அதை வெளியே வைத்திருந்தது. தண்ணீர் அப்பொழுது நியாயத்தீர்ப்பாயிருந்தது. நாம் கிறிஸ்துவின் அடிக்கப்பட்ட வாழ்க்கையின் மூலம் அவருக்குள் வந்து, நமக்குள் அவரை உறிஞ்சிக் கொண்டால், உலகத்தின் காரியங்கள் நமக்குள்ளே நுழையாதபடிக்கு தடுக்கப்பட்டு, கோபாக்கினை வந்தாலும் நிலைநிற்போம். புயல் அடித்து, கடல் கொந்தளித்தாலும், அந்த சிறு படகு கவிழ்ந்து போகாது. அது அலைகளின் வழியாக மிதந்து சென்று காலங்கள் தோறும் உள்ள கன்மலையை அடைகிறது. 43நோவா பேழையை உண்டாக்கிக் கொண்டிருந்தபோது ஆறுதல் அடைந்திருந்தான். “இது தான் நீ செய்யவேண்டிய முறை” என்னும் தேவனுடைய வார்த்தையை அவன் பெற்றிருந்தபடியால், அது அவனைத் தேற்றினது. யாராகிலும் நோவாவிடம் வந்து, “நோவா, நீ கொப்பேர் மரத்தால் இதை உண்டாக்குவதன் அர்த்தம் என்ன? அந்த மரத்தின் தன்மை உனக்கு நன்றாகத் தெரியும். அதை தண்ணீரில் போட்டால், அது மூழ்கி விடுமே” என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், பாருங்கள், தேவன் அவனுக்கு அளித்த செய்முறையை அவன் பின்பற்றினான். அவன் தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். அதுவே அவனுடைய தேற்றரவாளனாக இருந்தது. தேவனுடைய வார்த்தை அவனைத் தேற்றினது. இப்படி உண்டாக்க தேவன் ஏன் கூறினார் என்று எனக்குப் புரியவில்லை, ஆனால் இப்படித்தான் அவர் செய்யச் சொன்னார். 44நான் செய்யும் விதமாக தேவன் என்னைச் செய்யச் சொன்ன காரணம் எனக்குப் புரியவில்லை. நான் ஸ்தாபனங்களுடன் ஒத்துழைக்க அவர் ஏன் என்னை அனுமதிப்பதில்லை என்று புரியவில்லை. ஆனால் அது தான் அவர் கட்டளை. இப்படித்தான் அதை உண்டாக்க அவர் என்னிடம் கூறினார். “அவர் அதைக் கொண்டு என்ன செய்யப் போகிறார்?” எனக்குத் தெரியாது. நான் மரத்தை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அவைகளை ஆணியடிக்க வேண்டும். இந்த மரம் தேவனுடைய வார்த்தை. அங்கு தான் என் ஆறுதல் உள்ளது. அது உண்மை. தேவன் கூறின விதமாகவே அது கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை (மத். 16:18). அது உண்மை. அது என்ன? “இயேசு கிறிஸ்து யாரென்று அறிந்து கொள்ள ஆவிக்குரிய வெளிப்பாடு”. அவர் திரித்துவத்தில் இரண்டாம் ஆள் அல்ல. அதில் திரித்துவமே இல்லை. அவர் தேவன். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் மாத்திரமே. அங்கு தான் அவர் தமது சபையைக் கட்டுகிறார். “பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை. பாதாளத்தின் வாசல்கள் அதற்கு எதிராயிருக்கும் என்பதை அது காட்டுகிறது”, ஆனால் அது மேற்கொள்ள முடியாது. 45நோவா இந்த வார்த்தைகளை உடையவனாயிருந்தான் என்று நிச்சயமுடையவனாயிருந்து. உலகம் என்ன சொன்ன போதிலும், அவன் அறிந்திருந்தபடியால், தேற்றப்பட்டான். ஏதாவது ஒரு கான்ட்ராக்டர் அங்கு வந்து, “சகோ. நோவா, நீ கோபாவேசம் கொண்டு, விட்டு சென்றுவிட்டாய். உனக்கு ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன். நீ ஏன் இந்த திடமான, கனமான கர்வாலி மரத்தினால் அதை உண்டாக்கக் கூடாது?” என்று கேட்டிருப்பான். “கர்வாலி மரம் இதற்கேற்றதல்ல”. “கர்வாலி மரம் இந்த மரத்தைக் காட்டிலும் கனமானது என்று என்னால் நிரூபிக்க முடியும்”. கர்வாலி மரம் எவ்வளவு கனமானதாக இருந்தாலும் பரவாயில்லை. தேவன் குறிப்பிட்டது கொப்பேர் மரமே. அந்த மரத்தைக் கொண்டு தேவன் ஒன்றைச் செய்யப் போகின்றார். அவர் ஏதோ ஒன்றை அதனுடன் சேர்க்க வேண்டும். 46சிலர், “நீங்கள் ஏன் அறிவாளிகளையும் நன்றாக உடுத்தவர்களையும் நன்றாக பணம் கொடுப்பவர்களையும் பெற்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக் கூடாது? இந்த எளியவர்கள் கொண்ட கூட்டத்துக்கு நீங்கள் ஏன் பிரசங்கம் செய்கிறீர்கள்? நீங்கள் பாதி பட்டினியாயிருக்கிறீர்களே” என்று கேட்கின்றனர். அவர்கள் சத்தியத்தில் நிற்கும் பிரசங்கிமார்களிடம் இப்படி கேட்கின்றனர். ஓ, சகோதரனே, என்னால் ஒன்றும் கூற இயலாது! “நீங்கள் ஏன் அறிவாளிகளை, தங்கள் மொழியை அறிந்தவர்களின் கூட்டத்தை பெறக் கூடாது?” அது எப்படிப்பட்ட கூட்டமாயிருந்தாலும் பாதகமில்லை. கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள சித்தம் கொள்பவர்களுக்கு கிறிஸ்து ஏதோ ஒன்றைச் செய்கிறார். அந்த கூட்டத்தில் உள்ள மனிதனுக்கு ஒருக்கால் படிக்கத் தெரியாமல் இருக்கலாம். இருந்த போதிலும்... அவன் கிறிஸ்துவை அறிந்திருக்கிறான். அது தான் வித்தியாசம் பாருங்கள், அது உங்கள் அந்தஸ்தையோ, நீங்கள் உயர்வகுப்பை சார்ந்தவர்கள் என்று பெருமை பாராட்டிக் கொள்வதையோ சார்ந்ததல்ல. நம்மை நங்கூரமிட்டு நமக்கு பாதுகாப்பை அளிக்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அது சார்ந்துள்ளது. 47இவர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் வேறொருவனைக் குறிப்பிடுவோம் - யோபுவை. எனக்கு யோபுவைக் குறித்துப் பேச பிரியம். அவனுக்கு எப்படிப்பட்ட ஒரு தேற்றரவாளன் இருந்தார்! அவனுடைய தேற்றரவாளன் யார்? தேவனுடைய வார்த்தை. அவன் தகனபலிகளைச் செலுத்தினால் நீதிமானாகக் கருதப்படுவான் என்று தேவன் அவனிடம் கூறியிருந்தார். யோபு அந்த தகனபலியின் மேல் பயபக்தியோடு சார்ந்திருந்தான். புயல்கள் எவ்வளவு பயங்கரமாக அடித்த போதிலும், எவ்வளவு கொப்பளங்கள் வந்த போதிலும், எல்லாமே அவனை விட்டு எடுபட்ட போதிலும், அவன் தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நின்றான். அது யோபுவைத் தேற்றினது. 48அவனுடைய ஜனங்கள், சபைகள், வந்து அவனைக் குற்றம் கண்டுபிடித்து, “இங்கு பார், யோபுவே, இங்கு பார். நீ பாவம் செய்திருக்கிறாய் என்று அறிந்திருக்கிறாய். நீ தவறு செய்திருக்கிறாய் என்று அறிந்திருக்கிறாய். ஒரு நீதிமானை தேவன் இவ்வாறு எப்படி தண்டிக்க முடியும்? அவனுக்குள்ள எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, அவனுடைய பிள்ளைகளை எடுத்துக் கொண்டு, அவனுடைய குடும்பத்தை நாசப்படுத்தி, இவை எல்லாவற்றையும் செய்து. அவனுடைய ஆரோக்கியத்தையும் அவர் எப்படி குலைத்துப் போட முடியும்? இதோ நீ பரிதபிக்கப்படத் தக்க ஈனனாக இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். அப்படியிருக்க யோபுவே, நீ பாவியல்ல என்று எப்படி உன்னால் கூற முடியும்?” என்றனர். ஆனால் யோபுவோ அவன் பாவியல்ல என்பதை அறிந்திருந்தான். ஏனெனில் அவன் வார்த்தையின் மேல் நின்று கொண்டிருந்தான். ஆமென். தேவனுக்கு தகனபலியும் பாவ அறிக்கையும் தேவையாயிருந்தது. யோபு, பாவ அறிக்கை செய்து வார்த்தையின் மேல் நின்று கொண்டிருந்தான். அவனுடைய கஷ்டத்தின் மத்தியில் அவன், என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும் அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்“ என்றான் (யோபு. 19:25-26). பாருங்கள், அவனைத் தேற்றினது, தேவனுடைய வாக்குத்தத்தம், தேவனுடைய வார்த்தை. நாம் பெற்றுள்ள சுதந்தரம் அதுவே தேவனுடைய வார்த்தை. அது வாக்குத்தத்தம். ஆம், ஐயா. 49இன்று காலை நாம் ஆபிரகாமைக் குறித்துப் பேசினோம் இன்றிரவு அவனை வேறொரு சாட்சியாக மறுபடியும் கொண்டு வர விரும்புகிறேன். ஜனங்கள் அவனை மூட மதாபிமானி என்று அழைத்தபோது, ஆபிரகாம் எத்தகைய ஆறுதலைக் கொண்டிருந்தான்! எல்லாமே ஆபிரகாமுக்கு தவறாக சென்று கொண்டிருந்த போது, அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? “ஆபிரகாமே, அந்த சிறு பையனுடன் எங்கு செல்கின்றாய்?” “அவனை பலி செலுத்த சென்று கொண்டிருக்கிறேன்”. “ஏன்?” “அவர் யேகோவாவாக இருந்தால், அவர் என்னிடம் பேசின போது - அந்த சர்வ வல்லமையுள்ள தேவன், எல்ஷடாய், மார்பகம் - எனக்கு நூறு வயதும் என் மனைவிக்கு தொண்ணூறு வயதுமாயிருந்த போது. அவர் எங்களுக்கு இந்த பிள்ளையைக் கொடுத்தார். இப்பொழுது அதே தேவன் இந்தப் பிள்ளையின் ஜீவனைக் கேட்பாரானால் - நான் மரித்தோரிலிருந்து பாவனையாகப் பெற்றுக் கொண்ட இவனுடைய ஜீவனை - அவனைத் தேவன் மரித்தோரிலிருந்தும் எழுப்ப வல்லவராயிருக்கிறார் என்று நிச்சயித்திருக்கிறேன். ஏன்? அதுவே அவனுடைய ஆறுதல். 50முன் காலத்து யோபு அவனுடைய காலத்தில், “அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்” என்றான் (யோபு. 13:15). அந்த வார்த்தையில் அவன் நங்கூரமிடப்பட்டிருந்தான், வார்த்தை என்ன உரைத்தது என்பதை அவன் அறிந்திருந்தான். அதுவே அவனுடைய ஆறுதல். அவரை ஏற்றுக் கொண்டு, இறுகப் பற்றிக் கொண்டிருந்த அவனுடைய விசுவாசம் அதுவே. அவர் தேவன் என்பதை ஆபிரகாம் அறிந்திருந்தான். எனவே அவனுடைய குமாரன்... அவன் செத்தவனாயிருந்தான், சாராளின் கர்ப்பம் செத்துப் போயிருந்தது. அவனுடைய ஆண்மைத்துவம் செத்துப் போயிருந்தது. இருப்பினும் தேவன் அவனுக்கு ஒரு பிள்ளையை வாக்களித்திருந்தபடியால், அவனை அவனுக்குக் கொடுத்தார். அவனுக்கு வாக்களித்த அவரே அவனுடைய குமாரனைப் பலியிட வேண்டுமென்று கட்டளையிட்டால் அவனை மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். 51இப்பொழுது... மரித்திருந்த பாவியாகிய என்னை உயிரோடெழுப்பின தேவன்; அக்கிரமங்களினினாலும், பாவங்களினாலும் மரித்தவனாயிருந்த என்னுடைய ஆத்துமாவை அவர் உயிர்ப்பித்தார். அவர் ஏதோ ஒன்றை எனக்குச் செய்தார், அவர் ஏதோ ஒன்றை உங்களுக்குச் செய்தார். அவர் அந்த உலகத்தின் ஆவியை என்னிலிருந்து எடுத்துப் போட்டார். அவர் அந்த உலகத்தின் வாஞ்சையை எடுத்துப் போட்டார். அவர் என்னை அந்த, அந்தகாரத்தின் நிழல்களிலிருந்து உயர தூக்கினார். அவர் எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தந்தார். என் தேவன் அதை எனக்குச் செய்ய முடியுமானால், மரணம் என்னை அவரிடமிருந்து பிரிக்கவே முடியாது. அதுதான்! ஒன்றுமே என்னைப் பிரிக்க முடியாது. அதுதான் ஆறுதல். “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”. அது உண்மை! எனக்குத் தெரியும்! “என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்”. 52நான் உளையான சேற்றிலும் பாவத்திலும் மூழ்கிக் கிடந்த போது தேவன் என்னை உயர்த்தி என்னைக் கிறிஸ்தவனாகச் செய்திருப்பாரானால்! நான் கலங்கி துயரமுற்று, பரிதபிக்கப்படத் தக்க ஈனனாய் இருந்த நிலையிலிருந்து தேவன் என்னை உயர்த்தி, நித்திய ஜீவனின் நம்பிக்கையைக் கொடுத்து, என்னை பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்து. அவருடைய வல்லமையினாலும், மகிமையினாலும், என்னை நிறைத்திருப்பாரானால், என்னை மரண இருளின் பள்ளத்தாக்கின் வழியாக அவர் நடத்திச் சென்று, மறுபுறத்தில் என்னை மகிமையில் ஏற்றுக் கொள்ள அவர் வல்லவராயிருக்கிறார். ஏனெனில் அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அது நம்மைத் தேற்றுகிறது. நான் கிறிஸ்து என்னும் திடமான பாறையில் நிற்கிறேன் மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்து போகும் மணலே 53எபிரேய பிள்ளைகள் எரிகிற அக்கினிச் சூளைக்கு சென்று கொண்டிருந்த போது; இன்று காலை நாம் பேசின விதமாக, அவர்கள் உயிரை விட எரிகிற அக்கினிச் சூளைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, அவர்கள் வார்த்தையில் உறுதியான நிலை கொண்டிருந்தனர். இன்று காலை அதைக் குறித்துப் பேசினோம். அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள், “எங்கள் தேவன் வல்லவராயிருக்கிறார்” என்றனர். ஆமென். அவர்கள் அதிலே உறுதியாய் நின்றனர். அவர்கள் எதன் பேரில் நின்றனர்? அவர்களைத் தேற்றினது எது? இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் எரிந்து சாம்பலாய் போக வேண்டியவர்கள். அக்கினிச் சூளை ஏழு மடங்கு சூடாக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவர்கள் ஆறுதல் அடைந்திருந்தனர். ஏன்? “அந்த கோபமுள்ள அக்கினியிலிருந்து தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்” என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் ஆராதிக்கிற தேவனுடைய திறனின் மேல் அவர்களுடைய ஆறுதல் சார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தது. ஓ, என்னே! 54அவருடைய திறனின் மேல் சார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்த்தல்! அதுவே என் நம்பிக்கையும் நான் தங்கும் இடமாயும் உள்ளது. அவருடைய திறனின் மேல் நான் சார்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். அவருடைய கிருபையின் மேல் நான் சார்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். நான் என்னவாயிருக்கிறேன் என்பதன் மேல் அல்ல, அவர் அவருடைய வாக்குத்தத்தத்தின் மேல் நான் சார்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவர் வாக்குத்தத்தம் செய்து அதை நிறைவேற்றுவதாக ஆணையிட்டிருக்கிறார். நாம் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறேன். அது உண்மை! அவர்கள் அதன் மேல் சார்ந்திருந்தனர். அவர் எங்களை விடுவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் விடுவிக்காமற் போனாலும், உம்முடைய சிலையை நாங்கள் பணிந்து கொள்ள மாட்டோம் என்று எபிரேய பிள்ளைகள் கூறினர். அது எனக்குப் பிரியம். ஆம், ஐயா. “வாழ்க்கை பாதையின் முடிவில் அவர் என்னைக் கைவிட்டாலும், அவர் என்னை நித்திய பிரிவினைக்குள் தள்ளிவிட்டாலும், அவரை நேசிப்பேன். அவர் என்னுடையவர். நரகத்திலும் இப்பொழுது நான் நினைக்கிறபடியே நினைப்பேன். அவரை நான் அப்பொழுதும் நேசிப்பேன்; காலங்கள் கடந்து செல்கையில், அவரை நான் இன்னமும் நேசிப்பேன். ஏனெனில் என் இருதயத்தில் ஏதோ ஒன்று நடந்தது என்று கிறிஸ்தவன் எவனும் கூறுவான். ”எனக்கு ஒரு வாழ்க்கை. அல்லது மூன்று வாழ்க்கை இருக்க நேரிட்டாலும், நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல் இருக்க வாஞ்சிக்கிறேன். அது உண்மை. ஏனெனில் ஏதோ ஒன்று நடந்தது. அவரே என் ஜீவன். அவர் என்னிடத்தில் வந்தார். 55மோசே அறிந்திருந்தான். அவனுக்கு இருபது லட்சம் ஜனங்களின் மேல் பொறுப்பு இருந்தது. அவன் அவர்களை எகிப்திலிருந்து வெளியே நடத்திச் சென்ற போது, அவர்களுக்கு எவ்வாறு ஆகாரம் கொடுப்பான்? இருபது லட்சம் பேர். ஸ்திரீகள் தங்கள் தலையின் மேல் சிறிது பிசைந்த மாவை சுமந்து வந்தனர். நாற்பது ஆண்டு கால பயணத்தில் அவன் அவர்களை எவ்வாறு போஷிக்கப் போகிறான்? அத்தனை பேர் கொண்டவர்களின் மத்தியில் ஒவ்வொரு நாளும் எத்தனை குழந்தைகள் பிறந்திருக்கும். எத்தனை பேர் வயோதிபராயும் ஊனமுற்றோராயும் இருந்திருப்பார்கள் எத்தனை பேருடைய உடைகள் கிழிந்து போயிருக்கும். “நான் உடைகளுக்கு எங்கே போவேன்? நான் எப்படி இவர்களைப் போஷிப்பேன்? இவர்களுக்குத் தலைவனாக நான் இருக்கிறேனே. என்னால் எப்படி செய்ய முடியும்? என்று மோசே பதறினானா. தேவன், “நான் நிச்சயமாக உன்னோடு கூட இருப்பேன்” என்று உரைத்ததன் பேரில் மோசே சார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தான். ஆமென். “நான் நிச்சயமாக உன்னோடு கூட இருப்பேன்” என்பது தான் அவனைத் தேற்றினது. அதுவே அவர்களுக்குத் தேவையாயிருந்தது. “மோசே, நான் நிச்சயமாக உன்னோடு கூட இருப்பேன்” என்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் தேறுதலின் மேல் மோசே சார்ந்திருந்தான். எனவே அவர்கள் எப்படி போஷிக்கப்படுவார்கள் என்று காண்பது மோசேயின் வேலை அல்ல. ஆண்டவரே, அதை நீர் எப்படி செய்யப் போகிறீர் என்று மோசே கேள்வி கேட்கவில்லை. கேள்விகள் கேட்பது என் வேலை அல்ல. கேள்வி கேட்பது உங்களுடைய வேலை அல்ல. அவரை விசுவாசித்து, அவருக்குக் கீழ்படிந்து, “தேவன் அவ்வாறு உரைத்திருக்கிறார், அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது” என்று கூறி, அவருடைய வார்த்தையினால் தேற்றப்பட்டு அதன் மேல் இளைப்பாறிக் கொண்டிருப்பதே நம்முடைய வேலை. 56ஒருமுறை யாரோ ஒருவர் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் பிரசங்க பீடத்துக்கு சென்று, அங்கு பலப்பரீட்சைக்கு அழைக்கப்படும் போது, நீங்கள் பயப்படுவதில்லையா? அங்கு ஜெப வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது, தவறு நேரிடும் என்று சில நேரங்களில் நீங்கள் பயப்படுவதில்லையா என்று கேட்டார். இல்லை. ஐயா! நான் பயப்படுவதில்லை. ஏனெனில் அன்றிரவு அவர் என்னிடம், “நான் உன்னோடு கூட இருப்பேன். உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உனக்கு முன்பாக நிற்க முடியாது” என்றுரைத்த வாக்குத்தத்தத்தின் பேரில் நான் பயபக்தியோடு சார்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். அவர், “நான் உன்னோடு கூட இருப்பேன்” என்றார். எல்லா சத்துருக்களையும் அவர் அறுத்து போட்டார். அவர் நிற்பதற்கு எவ்விதத்திலும் தகுதியில்லாதவனாகிய என் பக்கத்தில் அவர் துணை நின்றார். ஏனெனில் அவருடைய கிருபையினால் அவர் அதை எனக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். அந்த வாக்குத்தத்தின் மேல் நான் பயபக்தியோடு சார்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். ஏன்? ஏனெனில் அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணினார்! அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அது உண்மை. மோசே அதை அறிந்திருந்தான். “நீ எப்படி சமுத்திரத்தைக் கடக்கப் போகிறாய்?” “எனக்குத் தெரியாது. ஆனால் அவர் என்னோடு கூட இருப்பதாக வாக்களித்திருக்கிறார்” என்று மோசே கூறியிருப்பான். எனவே பாலத்தை அடையும் வரைக்கும் அதை கடக்காதீர்கள். தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருங்கள், தேவன் உங்களுக்கு வழியைத் திறந்து கொடுப்பார். ஏனெனில் அவரே வழி. ஆம், தேவன் அவனிடம் உரைத்த வார்த்தையினால் மோசே தேற்றப்பட்டான். 57இப்பொழுது, யோவான். யோவானைக் குறித்து இன்று காலை பேசினோம் என்று நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. யோவான் ஸ்நான்னைக் குறித்து இன்று காலை பேசினோம் என்று நினைக்கிறேன். வனாந்தரத்தில் யாராகிலும் ஒருவர் அவனிடம் வந்து... “இங்கு பார்! இன்றைக்கு இஸ்ரவேலில் இருபது லட்சத்துக்கும் அதிகமானவர் இருக்கிறார்களே, நீ எப்படி மேசியாவைக் கண்டு கொள்ளப் போகிறாய்? உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டிருந்தால், அவன், “அவர் ஒரு சாதாரண ஆளாக இருப்பார். அவர் தாவீதின் குமாரரில் ஒருவராயிருப்பார்” என்று விடையளித்திருப்பான். “அவர் தாவீதின் வம்சத்தில் தோன்றுவாரா? அந்த வம்சத்தில் தோன்றினவர்கள் ஆயிரக்கணக்கானவர் உள்ளனரே. அவரை எப்படி கண்டு கொள்வாய்? அவரை அடையாளம் கண்டுகொண்டு எப்படி உலகத்துக்கு அவரை அறிமுகப்படுத்தப் போகிறாய்?” அவன், “என்னிடம் தேவனுடைய வார்த்தை உள்ளது, அவரை நான் அறிந்து கொள்வேன்” என்றான். அவன், “ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார் ஆமென். நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” என்றான். 58“யோவானே, அவரை எப்படி அறிந்து கொள்வாய். “நான் தேவனுடைய வார்த்தையின் மேல் சார்ந்திருந்கிறேன். வனாந்தரத்தில் தேவன் என்னிடம், 'நீ போய் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடு' என்றும், யார் மேல் ஆவியானவர் இறங்கித் தங்குவதை நான் காண்பேனோ அவரே பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்” என்றும் கூறினார் யோவான், அவர் அங்கு நின்று கொண்டிருந்தார், அவரை நான் அறியாதிருந்தேன். அவர் ஒரு சாதாரண மனிதன். அவர் மனிதனைப் போல் உடுத்து, காண்பதற்கு மனிதனைப் போலிருந்தார். அவர் ஒரு மனிதன்! அவரை நான் அறியாதிருந்தேன், ஆனால் வனாந்தரத்தில் அவர், “நீ ஒரு அடையாளத்தைக் காண்பாய், ஆவியானவர் அவர் மேல் தங்குவதே அந்த அடையாளம். அவர் தான் அப்படி செய்வார்” என்றார்“ என்றான். யோவான், தான் தவறு செய்வான் என்று பயப்படவேயில்லை, ஏனெனில் அவன் அவரை அறிந்திருந்தான்! ஆமென். 59ஓ, இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று சொல்லியிருக்க நாம் எப்படி தவறு செய்ய முடியும்? இக்காலத்து மனிதர் அந்த வல்லமையை மறுதலிக்கின்றனர். “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிப்பார்கள். நிச்சயமாக. நாம் காணத் தக்கதாக அது வெளிப்படையாயுள்ளது. 60தேவனுடைய வார்த்தை நம்மிடம், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்று உரைத்துள்ளபடியால் நாம் ஆறுதலடைகிறோம். குற்றம் கண்டு பிடிப்பவர்கள் இவைகளை கூறுவார்கள் என்று அவர் உரைத்துள்ளபடியால், அது நம்மை இன்னும் அதிகமாக தேற்ற வேண்டும். (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). அவன் ஆறுதலடைந்தான். அவர்கள், “ஒரு நிமிடம் பொறு! மறுபக்கத்தில் பிரதான ஆசாரியன் நின்று கொண்டிருக்கிறான்” என்றனர். அவன், “அது பிரதான ஆசாரியனானாலும், இல்லாவிட்டாலும், அது பேராயரானாலும் இல்லாவிட்டாலும், அது ராஜாவானாலும் இல்லாவிட்டாலும்” என்றான். ஏரோது அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தான். யோவான் அவனிடம், “நீ பிலிப்புவின் மனைவியை வைத்துக் கொண்டு அவளுடன் வாழ்வது நியாயம் அல்ல” என்றான். ஆமென். அவனிடம் என்ன இருந்தது? தேவனுடைய வார்த்தை. ஆமென். அவன் கவலைப்படவேயில்லை. அவன் ஒப்புரவாகாமல் அதைப் பிரசங்கித்தான். அவனிடம் வார்த்தை இருந்தது; அதுவே அவனுடைய ஆறுதல். அந்த மேசியா யாராயிருப்பார் என்று தேவன் அவனிடம் கூறியிருந்தார். 61“சரி, இப்போது மேசியா என்று யாராகிலும் இருப்பாரானால், அது நமது பிரதான ஆசாரியானாக இருக்ககூடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அவர், அதைப்பற்றி அறிந்திருப்பார் என்று நீங்கள் நினைக்கவில்லையா? ''எனக்கு அதெல்லாம் தெரியாது. ஆவியானவர் இறங்கி அவர் மேல் தங்குவதைக் காண்பேன் என்றும் அவர்தான் மேசியாவாயிருப்பார் என்றும் தேவன் என்னிடம் கூறியுள்ளார்.'' ஆமென்! யோவான், ''என் இருதயத்தில் ஆறுதலடைந்து நான் காத்திருக்கிறேன். ஏனெனில், தேவனுடைய வாக்குத்தத்தத்தை நான் அறிந்திருக்கிறேன். அவரைக் காணும்போது நான் அறிந்து கொள்வேன்'' என்றான். ஒருநாளில் இயேசுவும், லாசருவும் குன்றிலிருந்து இறங்கி வந்து குன்றிலிருந்து இறங்கி நேரிடையாக தண்ணீரண்டை நடந்து சென்றனர். அப்பொழுது யோவான், “இதோ அவர்! அது தான் அவர் என்றான். எல்லோரும் சுற்று முற்றும் பார்த்து விட்டு, ஒருவருக்கொருவர் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதவர்களாயிருந்தனர். எல்லோரும் தாடி வைத்துக் கொண்டு அங்கி உடுத்தி, காண்பதற்கு ஒரே போல் இருந்தனர். ஆனால் யோவானோ, அவரை நான் அறிவேன். ஏனெனில் ஒரு அடையாளம் அவரைத் தொடருகிறது. அவரை நான் அறிவேன். அது அவர் இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றான். 62இயேசு தலை நிமிராமல், ஞானஸ்நானம் பெறுவதற்காக தண்ணீருக்குள் நடந்து சென்றார். இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது ஏற்றதாயிருக்கிறது. அவர் மேசியா என்பதை அவன் அறிந்திருந்தான். ஏனெனில் அவனுடைய இருதயத்தில் அவன் தேவனுடைய வார்த்தையையும் வாக்குத்தத்தத்தையும் கொண்டிருந்தான், ஓ, இன்றிரவு நாம் எவ்வளவாக இளைப்பாற முடிகிறது மருத்துவர் நோயாளியின் படுக்கையை விட்டுச் செல்லும்போது, “இருதயம் சுக்குநூறாகிவிட்டது. நாடி நின்றுவிட்டது. மூச்சு அடங்கிக் கொண்டிருக்கிறது. அவர் மரித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்”. ஆனால், “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2தீமோ. 1:12) அல்லேலூயா! நிச்சயமாக, நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உடையவர்களாயிருக்கிறீர்கள். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். நாம் வாக்குத்தத்தத்தை, தேவனுடைய வார்த்தையை, பெற்றிருக்கிறோம். தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருப்பது நமக்கு ஆறுதலாயுள்ளது. 63இந்தப் பெரிய வீரர்கள் அனைவரும் - அவர்களில் பலரைக் குறித்து இங்கு எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் நேரத்தை மிச்சப்படுத்த அவர்கள் தேவனுடைய வார்த்தையினால் தேற்றப்பட்டனர் என்று நாமறிவோம். அவர்கள் இதை தான் செய்தனர். அவர்கள் முன்காலத்தை நோக்கினர். உதாரணமாக, ஒருவன் பின்காலத்தை நோக்கி, மற்றொருவன் வார்த்தையைக் கைக் கொண்டு அதனால் தேற்றப்பட்டதைக் கண்டு அதைக் கைக்கொண்டான். வேறொருவன் இவனைப் பின் நோக்கிப் பார்த்து அவன் செய்ததைக் கண்டு அவனும் வார்த்தையைக் கைக் கொண்டு, தேவனுடைய வார்த்தையைப் பெற்றிருந்தான் என்றறிந்து ஆறுதல் கொண்டான். அடுத்தபடியாக வேறொருவன் வந்து அவன் மேல் ஆவியானவர் தங்கியிருந்தார் என்பதை அறிந்தவனாய் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றி ஆறுதல் கொண்டான். இப்படியாக ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றினர். அது அவர்களுக்கு ஆறுதலாய் இருந்தது. 64ஓ, சகோதரனே, இதை இப்பொழுது கவனி. ஒரு நாள் அந்த வார்த்தை மாம்சமானது. அது தான் அந்த வார்த்தை மாம்சமாகி மனித உருவில் தோன்றினது. ஆறுதலைக் கொண்டு வந்த தேவனுடைய வார்த்தை நமது மத்தியில் ஒரு மனிதனாக தோன்றினது. தேவனுடைய வார்த்தையை நமது கரங்களால் தொட்டுப் பார்க்க முடிந்தது. தேவனுடைய வார்த்தையுடன் நம்மால் கைகுலுக்க முடிந்தது. அவர் வார்த்தையாயிருந்தார். ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார். அந்த தேவனுடைய வார்த்தை தேற்றரவாளனாக மாம்சத்தில் வெளிப்பட்டார். அவர் பூமியில் வாசம் பண்ணினார். அவர் வார்த்தை என்பதை நாம் கண்டோம். அவர் தேவனைப் போல் நடந்து கொண்டார். அவர் தேவனைப் போல் காணப்பட்டார். அவர் தேவனைப் போல் பிரசங்கித்தார். அவர் தேவனைப் போல் சொஸ்தமாக்கினார். அவர் தேவனாயிருந்தார். அவர் எல்லா வகையிலும் தேவனாயிருந்தார்! அவர் வார்த்தையைப் போல் பேசினார். அவர் வார்த்தையைப் போல் காணப்பட்டார். அவர் வார்த்தையைப் போல் பிரசங்கித்தார். அவர் வார்த்தையாயிருந்தார்! ஆமென். 65ஓ, அவரருகில் உட்கார்ந்து கொண்டிருப்பது எவ்வளவு ஆறுதலை அளித்திருக்கும்! அப்படி செய்ய நீங்கள் பிரியப்பட்டிருப்பீர்கள் அல்லவா? நீங்கள், “ஓ, சகோ. பிரான்ஹாமே, நான் நிச்சயம் பிரியப்பட்டிருப்பேன்” என்பீர்கள். அவர் பூமியில் இருந்த போது, அவரிடம் ஓடிச் சென்று அவரருகில் உட்கார நான் பிரியப்பட்டிருப்பேன். பூமியில் காலூன்றி நின்ற வேறெந்த மனிதனும் லாசருவின் கல்லறையில் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” என்று சொல்லியிருக்க முடியாது. ஓ, என்னே! அது யார்? அது என்ன? அது வார்த்தை. அவர் வார்த்தையாயிருந்தார். அவர் அங்கு நின்று கொண்டு, மனிதன் என்னும் முறையில் கண்களிலிருந்து ஒழுகின கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அதே சமயத்தில் மரித்து கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்களான மனிதனிடம், “லாசருவே, வெளியே வா!” என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. அது என்ன? அது வார்த்தை. ஆமென். அது செயல்பட்ட வார்த்தை. அவர் வார்த்தையாயிருந்தார். அந்த வார்த்தை தான் தீர்க்கதரிசிகளிடம் வந்தது. தீர்க்கதரிசி ஒவ்வொருவனும் அவரைக் குறித்து முன்னுரைத்தான். 66சனகரீம் சங்கத்தினரிடம் ஸ்தேவான், “நீதிபரருடைய வருகையை முன்னறிவித்த தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீங்கள் ஜீவாதிபதியைக் கொண்டு போய் கொலை செய்தீர்கள்” என்றான். ஓ, என்னே! “நீங்கள் ஜீவ வார்த்தையைக் கொலை செய்தீர்கள். அவரே வார்த்தை”. அதோ அவர், வார்த்தை அவர்கள் மத்தியில் இருந்தது. அவர் மரித்தவனின் கல்லறைக்கு நடந்து சென்றதை அவர்கள் கண்டனர். சவ ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த நாயீனின் விதவையை அவர் நிறுத்தினதை அவர்கள் கண்டனர். அவளுடைய ஒரே மகன் மரித்துப் போய், அவனுடைய சவம் தைலமிடப்பட்டு கல்லறைக்குச் சென்று கொண்டிருந்தது. அந்த சவம் வார்த்தையுடன் தொடர்பு கொண்டது. அது சவமாயிருந்த போதிலும், அவன் உயிர் பெற்றான். அவன் மரித்தாலும் பிழைப்பான் ஒரு சவம் உயிர் பெற்றது. ஏனெனில் அது வார்த்தையுடன் தொடர்பு கொண்டது. ஓ, வார்த்தையடன் தொடர்பு கொள்ளும் போது, அது என்ன செய்யும்! அது தான் ஆறுதல். 67ஓ, ஒருமுறை மனிதர் ஒரு கூட்டம் கலிலேயரைக் கண்டனர். அவர்கள் ஒருக்கால் மீன் பிடிப்பவர்களாக இருக்கக் கூடும். அவர்களிடையே படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அளவுக்கு நோய் வாய்ப்பட்டிருந்த ஒரு ஏழை வயோதிபன் இருந்தான். அவனை அவர்கள் வார்த்தையிடம் கொண்டு செல்ல முனைந்தனர். அங்கு இடமில்லாமல் போனது, ஏனெனில் தேவனுக்காக பசி கொண்ட அநேகர் அங்கிருந்தனர். அந்த வீடு, சிறு வீடு, ஆற்றங்கரையிலிருந்த மீன் பிடிப்பவனின் குடில், ஜனத்திரளால் நிறைந்திருந்தது. கூரையில் சில ஓடுகள் இருந்தன. வார்த்தைக்கு முன்னால் இந்த மனிதனைக் கொண்டு செல்வதற்கென அவர்கள் செலுத்த வேண்டிய கிரயத்தைக் குறித்து. அவர்கள் சிறிதளவும் சிந்திக்கவில்லை. வார்த்தையுடன் தொடர்பு கொள்ள எண்ணி அவர்கள் கூரையைப் பிரித்தனர். வார்த்தையாகிய அவர் கட்டில் இறங்கி வருவதைக் கண்ட போது, “மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்றார். ஏன்? அவன் வார்த்தையுடன் தொடர்பு கொண்டான் பாருங்கள். அவன் அதை விசுவாசித்தான். அவன், உங்களுக்குத் தெரியுமா, நான் இத்தனை ஆண்டுகளாக கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கிறேன். என்னால் முடியாது“ என்று கூறியிருப்பானானால், அது அவனுக்கு பலனை அளித்திருக்காது. ஆனால் அவன் வார்த்தையுடன் தொடர்பு கொண்ட போது, அவன் வார்த்தையை ஏற்றுக் கொண்டான். அவன் வார்த்தையை சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டான். அதை நான் விசுவாசிக்கிறேன். அது அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் வார்த்தை என்று அறிந்திருக்கிறேன். எனவே அவன் வார்த்தையுடன் தொடர்பு கொண்ட மாத்திரத்தில் தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். பரிசேயன், “இந்த மனிதன் தேவ தூஷணம் சொல்லுகிறான், இவன் பாவங்களை மன்னிக்கிறான்” என்றான். அவர், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று சொல்வதோ, அல்லது உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது என்றார். பாருங்கள், ஓ, என்னே! அவர் யாரென்பதை அவர்கள் காணத் தவறினர். அவர் வார்த்தையாயிருந்தார். 68அந்த கலிலேயர்களுக்கு அது எவ்வளவு ஆறுதலாக இருந்தது. அவர்கள் எவ்வளவாய் அவரை நேசித்தனர்! ஒரு நாள் அவர் கல்வாரிக்குச் செல்வதை அவர்கள் கண்டனர். அவர், “இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஓ, நான் மனுஷ குமாரன். நான் எருசலேமுக்குப் போய் அங்கு பாவியான மனிதரின் கைகளில் ஒப்புக் கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையுண்டு மரிக்க வேண்டும்” என்று கூறுவதை அவர்கள் கேட்டனர். அவர்களால் எப்படி அதை பொறுத்துக் கொள்ள முடியும்? அவர்களுடைய இருதயம் வேதனைப்பட்டது. அவர்கள் துயறுற்றனர். அவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அவரை விட்டு அவர்கள் எப்படி பிரிய முடியும்? ஏனெனில் உலகம் தொடங்கின முதற்கொண்டு, தீர்க்கதரிசிகளும், பரிசுத்தவான்கள் அனைவரும் இந்த வார்த்தையைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தனர். இதோ அந்த வார்த்தை அவர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அவர் என்ன வாக்குத்தத்தம் செய்தார் என்று பாருங்கள்! “உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன். நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன். அப்பொழுது அவர் பரிசுத்த ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை உங்களுக்குத் தந்தருளுவார். அவர் என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருப்பார். உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது. ஆனால் நீங்கள் அவரை அறிவீர்கள். ஏனென்றால் அவர் உங்களுடனே வாசம் பண்ணி, உங்களுக்குள் இருப்பார்”. 69பார்த்தீர்களா! அவர் எவ்வளவு காலம் தங்கியிருப்பார்? என்றென்றைக்கும்!அப்படியானால் தேவனுடைய வார்த்தை என்ன? இன்றைக்கு நமக்குள்ள ஆறுதல் என்ன? நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று, ஜீவனுள்ள தேவனுடைய வல்லமை நமக்குள் வாசம் செய்தலே. நாம் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையுடன் நின்று கொண்டிருக்கிறோம். வார்த்தை மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார். மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணின அதே ஆவி நம்முடைய மாம்சமாகிவிட்டது. அவர் இப்பொழுது உங்களுடனே வாசம் பண்ணுகிறார், இனிமேல் உங்களுக்குள்ளே இருப்பார்“. தீர்க்கதரிசிகள் உரைத்த அதே வார்த்தை, மாம்சமான அதே வார்த்தை; அதே வார்த்தை இப்பொழுது சபையில் வாசம் பண்ணுகிறது. எனவே நாம் எக்காரணத்தைக் கொண்டும் ஒப்புரவாகாமல் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும். நாம் ஒப்புரவாகாமல் இருப்போமானால், உங்களுக்குள் வாசம் செய்யும் அதே வார்த்தை, அது மாம்சமான போது செய்த அதே கிரியைகளை இப்பொழுது உங்கள் மூலம் செய்யும். ஏனெனில் உங்கள் மாம்சம் அதைப் பெற்றுள்ளது. ஆகையால் தான் ஒலித் தடைகளையும் உடைத்துக் கொண்டு தரிசனங்கள் உண்டாகின்றன. ஆகையால் தான் காலத் தடைகளையும் உடைத்துக் கொண்டு தரிசனம் உண்டாகி, “கர்த்தர் உரைக்கிறதாவது, அது இன்னின்ன விதமாக இருக்கும்” என்று கூற முடிகிறது. அப்படித்தான் அது உள்ளது. அது என்ன? ஆவியிலிருந்து வார்த்தை புறப்பட்டு வருதல். 70நீங்கள் என்னைக் காண்பதில்லை. என் சரீரத்தையே காண்கிறீர்கள். நீங்கள் என்னைக் காண்பதில்லை. நானும் உங்களைக் காண்பதில்லை. ஏனெனில் உங்கள் சரீரத்தையே நான் காண்கிறேன். இது என் கை. ஆனால் இந்த கைக்கு சொந்தம் யார்? இது என் சரீரம், ஆனால் நான் யார்? அது ஒரு ஆவி. நான் மறுபடியும் பிறக்கும் போது, நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது. தேவனுடைய பரிசுத்த ஆவி, தேவனுடைய வார்த்தை நமக்குள் வாசம் செய்கிறது. நாம் வார்த்தையின் பேரில் ஒப்புரவாகி, அதே சமயத்தில் தேவனுடைய ஆவியைப் பெற்றுள்ளதாக கூறிக் கொண்டால், நாம் தேவனுடைய ஆவியைப் பெற்றுள்ளதாக எவ்வாறு உரிமை கோர முடியும்? தேவனுடைய ஆவி தமது சொந்த வார்த்தையைக் குறித்து சாட்சி பகருவார். அதிலிருந்து ஒரு அங்குலம் கூட விலகமாட்டார். ஸ்தாபனங்கள் என்ன கூறினாலும் கவலையில்லை! அது அவருடைய சொந்த வார்த்தையாய் இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து அவர் எப்படி விலக முடியும்? 71“நான் உங்களுடனே தேற்றரவாளனாக இருப்பேன்” என்பது வாக்குத்தத்தம். அவர், “நான் தேற்றரவாளனை உங்களிடத்தில் அனுப்புவேன் என்றார். அவர்கள் மேலறையில் கூடி, பெந்தெகொஸ்தே நாள் வரைக்கும் காத்திருந்தனர். வார்த்தை என்ன உரைத்திருந்ததோ, அதை அப்படியே நிறைவேற்றும் வகையில் பரிசுத்த ஆவி இறங்கி, அது என்ன செய்யுமென்று தேவன் கூறினாரோ, அதை அப்படியே செய்து நிறைவேற்றினது. ஏசாயா. 28:18-ல் அது ஏசாயா. 28:18,19 என்று நினைக்கிறேன். அது, “கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். நலமானதைப் பற்றிக் கொள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன்” என்றுரைக்கிறது. அதை தான் அவர் செய்யப் போவதாக வாக்களித்தார். பவுல் நிரூபங்களில் அதைக் குறிப்பிட்டு, “மறு பாஷைக்காரராலும், மறு உதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்” என்று. அவர் உரைத்ததாகக் கூறுகிறான் (1கொரி. 14:21). பரிசுத்த ஆவி வந்த போது, வார்த்தை உரைத்த அதே விதமாக வந்தது. மகிமை! அது மறுபடியும் வந்து, மறுபடியும் பிறந்த சபைக்கு வரும்போது, அது அதே வல்லமையுடனும் கிரியைகளுடனும் வரும். நமக்குள் இருக்கும் தேற்றரவாளனாகிய தேவனுடைய வார்த்தை - அதையே மறுபடியும் கொண்டு வருவார். 72அண்மையில் ஒரு கத்தோலிக்க குருவானவருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர், “நீங்கள் மற்றுமொரு வேத போதகர். நீங்கள் வேதத்தில் நிலைத்திருக்கிறீர்கள். அது கத்தோலிக்க சபையின் வரலாறு” என்றார். நான், “இன்றைக்கு நீங்கள் அதைக் காட்டிலும் பெரியவர்கள் என்று உரிமை கோருகிறீர்களா?” என்றேன். அவர், “நிச்சயமாக, எங்கள் விருப்பப்படி அதை மாற்றிக் கொள்கிறோம், பாருங்கள், ஏனெனில் அது சபைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம்” என்றார். நான், “ஏதோ ஒன்று நடந்து விட்டது! ஏனெனில் ஆதி காலங்களில் பரிசுத்த ஆவி உங்களோடு கூட இருந்து, நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் பெற்றிருந்தீர்கள்” என்றேன். ஆதி கத்தோலிக்க சபை அந்நிய பாஷைகள் பேசினது. ஆதி கத்தோலிக்க சபை தீர்க்கதரிசனம் உரைத்தது; அவர்களுக்கு தீர்க்கதரிசிகள் இருந்தனர். ஆதி கத்தோலிக்க சபை அற்புதங்களை நடப்பித்தது. அவர்கள் பிணியாளிகளை சொஸ்தப்படுத்தினர். மரித்தோரை உயிரோடெழுப்பினர். அவர்கள் கூச்சலிட்டு பைத்தியக்காரரைப் போல் நடந்து கொண்டனர். அவர்கள் ஆவியில் நடனமாடினர். அவர்கள் 'பைத்தியக்காரர்' என்று அழைக்கப்பட்டனர். ஆனால் இன்றைக்கு கத்தோலிக்கராகிய நீங்கள் வணங்காத் தன்மையுள்ளவர்களாகிவிட்டீர்கள். பாருங்கள், நீங்கள் புது போக்கில் சென்றுவிட்டீர்கள். கத்தோலிக்க சபையானது அது தொடங்கின இடத்துக்கு செல்ல இதுவே சமயம். அந்த காலத்தில் நீங்கள் வார்த்தை மாம்சமான நசரேயனாகிய இயேசுவுடன் நடந்தீர்கள். பாருங்கள், இப்பொழுது நீங்கள் ஒரு கூட்டம் குருவானவர்களையும் போப்பாண்டவரையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்கள் வார்த்தையை மாற்றி அமைத்து, அதை சீர்குலையச் செய்துவிட்டனர். சபையில் வல்லமையே இல்லை. அது ஒரு ஸ்தாபனம் மாத்திரமே. மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தேகாரர் போன்ற இவைகளும் ஸ்தாபனங்களே. இந்த ஸ்தாபனத்தை விட்டு நாம் வெளியேறுவோம். 73ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் சிறையில் உங்களை அடைத்துக் கொள்ளாதீர்கள். அவிசுவாசமாகிய அடித்தளத்தில் அடைபட்டு தேவனுடைய வார்த்தையை மறுதலிக்காதீர்கள். பேராயர் அல்லது வேறு யார் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. வார்த்தை உங்களுக்குள் வந்து, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அது மாம்சமாகி, உங்கள் மாம்சத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்து, ஜீவனுள்ள தேவனுடைய கிரியைகளையும் வல்லமையையும் நடப்பித்து, உங்கள் மூலமாய் சாட்சி பகரட்டும். அது உண்மை. சபைகள் என்ன கூறினாலும் கவலையில்லை. இந்த ஸ்தாபனங்கள் உங்களை அடித்தளத்தில் அடைத்து போடுகின்றன. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட சூரிய வெளிச்சத்தைக் காணாதபடிக்கு உங்களை மறைத்துக் கொள்கிறீர்கள். அது உண்மையென்று எனக்குத் தெரியும். நீங்கள் அடித்தளத்தில் தங்க பிரியப்படுகிறீர்களா? யாருமே பிரியப்பட மாட்டார்கள். அடித்தளத்துக்கு செல்லாதீர்கள். சூரிய வெளிச்சத்துக்கு வாருங்கள். நீங்கள் வார்த்தையை எடுத்துக் கொண்டு அதை விசுவாசிக்கும்படியான இடத்துக்கு வாருங்கள். அப்பொழுது வார்த்தை தன்னை உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்து, உங்கள் மூலமாக அது வெளிப்பட்டு, நிறைவேற்றும். 74தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்போமானால்; நாம் கேட்டுக் கொள்வதை தேவன் நமக்கு செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்போமானால், அவர் சொன்னவைகளுக்கு கீழ்படியாமல் இவைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. நாம் விட்ட இடத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் பெந்தெகொஸ்தேவுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். நமக்கு ஆறுதலாயுள்ள பரிசுத்த ஆவியினிடத்தில் நாம் திரும்பிச் செல்ல வேண்டும். பரிசுத்த ஆவி வரும்போது, அது உரைத்த எந்த வார்த்தையையும் மறுதலிக்காது. அது அந்த வார்த்தையில் நிலைறிந்கும். ஏனெனில் அதுவே வார்த்தை. ஆமென். பார்வையிழந்த ஃபானி கிராஸ்பி சூரிய வெளிச்சத்தைக் கண்டதேயில்லை. கிறிஸ்துவைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களைக் கேட்டபோது, அவர்கள்: நீரே என்னைத் தேற்றும் நீரோடையாய் என் ஜீவனைக் காட்டிலும் மேலானவராய் இருக்கிறீர் உம்மையல்லாமல் பூலோகத்தில் எனக்கு யாருண்டு? உம்மைத் தவிர பரலோகத்தில் எனக்கு யாருண்டு? என்றார்களாம். தேற்றரவாளன் இங்கிருக்கிறார். தேற்றரவாளன் வந்து விட்டார். ஓ, மனிதன் உள்ள இடத்தில் எல்லாம் தேற்றரவாளன் வந்து விட்டார் என்னும் நற்செய்தியைப் பரப்புங்கள். 75அது என்ன? தேவனுடைய வார்த்தை உங்கள் மாம்சத்தில் நங்கூரமிடப்படுதல். அது உங்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறது. அது உங்களை, உலகத்தின் காரியங்களிலிருந்தும் மனிதனின் குருட்டு பாரம்பரியங்களிலிருந்தும் வெளியே கொண்டு வருவதற்கு உங்களுக்கு உயிர்த்தெழுதலின் வல்லமையை அளித்து, நீங்கள் தேவனுடைய ஆரோக்கியமான சூரிய வெளிச்சத்தில் நடக்கும்படி செய்கிறது. அதை தான் தேற்றரவாளன் செய்கிறார். அது உங்களை அடித்தள நிலையிலிருந்து தூக்கியெடுத்து, உங்களை தேவனுடைய சமுகத்தில் கொண்டு வந்து, தேவனுடன் ஒரு அனுபவத்தை உங்களுக்கு அளித்து, நீங்களும் முன்காலத்து யோபுவுடன் கூட சேர்ந்து “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” என்று கூச்சலிடச் செய்கிறது. நாம் அவருடைய வார்த்தையை காணும்போது, அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் அந்த ஒளியில் நடக்க மறுப்போமானால், தேவனுடன் நாம் கொண்டுள்ள ஐக்கியம் அறுந்து போகிறது. ஆனால் நாம் ஒளியைக் கண்டு, அவர் ஒளியாயிருப்பதனால், அந்த ஒளியில் நாம் நடப்போமானால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அப்பொழுது தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை சகல பாவங்களிலிருந்தும் நீக்கி சுத்திகரிக்கிறது. 76இன்னும் சில நிமிடங்களில் நாம் அப்பம் பிட்கப் போகிறோம். அந்த 'கோஷர்' அப்பம் வார்த்தையை எடுத்துக் காட்டுவதாய் உள்ளது. அதை மறந்து போகாதீர்கள்! என் ஆறுதல், என்னைத் தேற்றும் நீரோடை, இன்றிரவு என்னைத் தேற்றும் நீரோடை என்னவெனில், தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார் என்று நான் அறிந்துள்ளதே. எனக்கு ஏதோ ஒன்று நேர்ந்துள்ளதென்று நான் அறிந்திருக்கிறேன். நான் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். அவருடைய கற்பனைகளைக் கைக் கொள்கிறேன் என்று அறிந்திருக்கிறேன். நான்... “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக் கொள்ளுங்கள்” என்றார் அவர் (யோவான். 14:15). “என்னிடத்தில் அன்பாயிருந்தால், நான் சொல்வதை செய், எல்லா மனுஷருடைய வார்த்தையும் பொய், என் வார்த்தையே சத்தியம். மனிதன் சொன்னதை பின்பற்றாதிருங்கள். தேவன் சொல்வதையே பின்பற்றுங்கள். அங்குதான் நீங்கள் தேற்றரவாளனைக் காண்பீர்கள். அந்த ஆறுதல் உங்களுக்கு திருப்தியளிக்கும். ஏனெனில் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 77நாம் தலை வணங்குவோம்: பெரிய, மகத்துவமுள்ள யேகோவாவே, ஃபானி கிராஸ்பி “நீரே என்னைத் தேற்றும் நீரோடை” என்று கூறினதை சிறிது நேரத்துக்கு முன்பு குறிப்பிட்டேன். உண்மையாக, தேவனே, இன்றிரவு நானும் இந்த சிறு சபையும் அவளுடன் சேர்ந்து, “நீரே எங்களைத் தேற்றும் நீரோடை” என்று கூறுகிறோம். கர்த்தாவே, வியாதியஸ்தரிடமிருந்து வந்துள்ள சில உறுமால்களை என் கையில் பிடித்திருக்கிறேன். அவதியுறுவோரிடம் இவை செல்கின்றன. பிதாவே, அவர்களை நீர் சுகமாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். நீரே வார்த்தை. வார்த்தை எங்கள் மத்தியில் வருகிறது. வார்த்தை எங்களுக்குள் வாசம் செய்கிறது. “உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன். நான் மறுபடியும் உங்களிடத்தில் வருவேன். இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுக்குள் இருப்பேன்”. கர்த்தாவே, அதற்காக உமக்கு நாங்கள் எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம்! 78ஒரு பாவியின் வாழ்க்கையில் உமது வல்லமை இறங்குவதைக் காணும் போது - நிர்ப்பாக்கியமுள்ள ஒரு ஸ்திரீ; நன்னடத்தையைக் கடந்து நடத்தை கெட்ட வழியில் சென்று கொண்டிருக்கும் ஒரு பெண் நாணயமாக வாழ்ந்திருந்து, குடிகார சிகரெட்டு பிடிக்கும் நிலையை அடைந்த இளைஞன்; நடத்தை கெட்ட மனிதனுக்கு முன்னால் தன்னைக் காட்டும் ஒரு பெண். அந்த பெண் நற்பண்புள்ள பெண்ணாக மாறுவதையும், அந்த இளைஞன் சிகெரட்டுகளையும் மதுவையும் தூக்கி எறிந்து, முன் வந்து தேவனுடைய பரிசுத்தவானாக மாறி, பிரசங்க பீடத்தில் பிரசங்கம் செய்வதையும் காணும் போது, தேவனாகிய கர்த்தாவே, உமது மகத்தான வல்லமை இவையனைத்தும் செய்ய முடியும் என்பதை அறிந்திருக்கிறோம். புற்று நோயால் அவதியுற்று எலும்பும் தோலுமாய் கிடக்கும் மனிதனும், அங்கு பார்வையிழந்தவனாய் நின்று கொண்டிருக்கும் மனிதனும் ஜீவனைப் பெற்று உயிர் வாழ்வதைக் காணும் போது! ஓ, அந்த ஜீவனுள்ள தேவனின் வார்த்தையே! உமக்கு நாங்கள் எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம்! நீரே எங்களைத் தேற்றும் நீரோடை. தேற்றரவாளன் தாமே, “உங்களுடனே என்றென்றைக்கும் இருப்பேன்” என்னும் வாக்குத்தத்தத்துடன் வந்துள்ளதற்காக இன்றிரவு நான் மிக்க மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். ராஜ்யத்தின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டிருந்த அந்த மகத்தான அப்போஸ்தலன் பெந்தெகொஸ்தே நாளில், “வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்றான். அப்பொழுது அதே தேற்றரவாளன் வருகிறார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர் எங்கள் இரட்சகர் என்று இன்றிரவு நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் அன்று செய்தது போல் இன்றும் தம்மை எங்கள் மத்தியில் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் நாங்கள் அவரை அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையின் படியும் அவர் நடந்து கொள்கிறார். அவர் கூறினதை அவர் வாபஸ் வாங்க முடியாது. ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார். பிதாவே, அதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். 79இன்றிரவு இங்குள்ள ஒவ்வொரு இருதயத்தையும் ஆறுதல்படுத்தும்படி ஜெபிக்கிறேன். இந்த ஜனங்களை ஆறுதல்படுத்துவீராக. உமது ஆவியை அவர்களுக்குத் தாரும் பிணியாளிகளையும் ஊனமுற்றோரையும் சுகப்படுத்தும். ஓ, பாவத்தின் காரணமாய் சோர்ந்து போயுள்ள ஸ்திரீயையும், பையனையும், பெண்ணையும் கண்ணோக்குவீராக. அவர்கள் தாமே இன்றிரவு தங்கள் பாவத்திலிருந்தும் உலக காரியங்களிலிருந்தும் பார்வையைத் திருப்பி, எங்களுக்குள் வாசம் செய்வதாக வாக்களித்துள்ள இயேசுவை நோக்குவார்களாக. அவர் செய்த கிரியைகளை நாங்களும் செய்வோம். ஏனெனில் அவர் பரிசுத்த ஆவியின் உருவில் எங்களிடம் தங்கும் தேற்றரவாளனாக வந்து, எங்களோடு என்றென்றைக்கும் இருப்பார். பிதாவே, இந்த ஆசீர்வாதங்களை அருளுவீராக. வியாதியஸ்தரை சுகமாக்க வேண்டுமென்று மறுபடியும் ஜெபிக்கிறேன். அநேகர் அவதிப்பட்டோராயும் தேவையுள்ளவர்களாயும் இருக்கின்றனர். 80இப்பொழுதும், “நான் வருமளவும் இதை செய்யுங்கள்” என்று எங்களுக்கு நீர் விட்டு சென்ற கட்டளைக்கு கீழ்படிந்து, இராப்போஜனம் அருந்த மேசைக்கு வருகிறோம். பிதாவே, இவைகளுக்காக உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இன்றிரவு இராப்போஜன மேசைக்கு வரும் ஒருவராவது பலவீனராயிருக்க வேண்டாமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, என் வயோதிப தாய் இராப்போஜனத்தை உட்கொள்ள சென்ற முறை இங்கு வந்திருந்தபோது கை நடுங்கிக் கொண்டே உட்பாதையின் வழியாக நடந்து வந்ததை என்னால் காணமுடிகிறது; அந்த தட்டின் மேல் அவர்களுடைய சிறு வயோதிப கரங்கள் எவ்வாறு நடுங்கின! அங்கு நான் நின்று கொண்டு என் இருதயத்தில் கண்ணீர் சொரிந்து கொண்டே அவர்களைக் கவனித்தேன். இன்றிரவு அவர்கள் கல்வாரியை நோக்கினவர்களாய் படுக்கையில் கிடக்கிறார்கள். ஓ, தேவனே, நான் எவ்வளவாய் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்! “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்வேன்” என்றீர். கர்த்தாவே, அது வார்த்தை. ஆகையால் தான் நான் நின்று கொண்டு, “நான் தேவனை விசுவாசிக்கிறேன்” என்று சொல்ல முடிகிறது. 81இப்பொழுதும், பிதாவே, இந்த கட்டளை முதலில் வனாந்தரத்தில், எகிப்தில் கொடுக்கப்பட்ட போது, பஸ்கா ஆடு பலி செலுத்தப்பட்டது என்று உணருகிறோம். அவர்கள் நாற்பது ஆண்டுகளாக பிரயாணம் செய்தனர். ஆனால் எகிப்தை விட்டு வெளி வந்த இருபது லட்சம் பேர்களில் பலவீனர் ஒருவராகிலும் இருக்கவில்லை. அவர்கள் பஸ்காவை புசித்ததன் நிமித்தம் அவர்களை நீர் ஆரோக்கியமாக வைத்தீர். ஓ, தேவனே, முன்னால் வரும் வியாதியஸ்தர் ஒவ்வொருவரையும் சுகமாக்குவீராக. கர்த்தாவே, இதை அருளும். ஒவ்வொரு பாவியையும் இரட்சியும். ஒவ்வொரு விசுவாசியையும் பரிசுத்த ஆவியினால் நிரப்பும். தேற்றரவாளன் தாமே, மறுபடியும் எங்கள் மத்தியில் இயேசு கிறிஸ்து என்னும் நபராக மாம்சத்தில் வெளிப்படும் வரைக்கும், தங்கியிருப்பாராக. அவருடைய நாமத்தில் கேட்கிறோம்! ஆமென். 82நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? இப்பொழுது நம் கண்களை மூடி, நமது கரங்களை உயர்த்தி, நமது இருதயத்திலிருந்து அதை பாடுவோம்: நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில், 83இப்பொழுது பிரயாணம் செய்து கொண்டிருக்கிற ஒரு போர்வீரர் உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் பாதையில் சென்று கொண்டிருக்கிற ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி. அவர்களும் நீங்கள் செல்லும் பாதையிலேயே சென்று கொண்டிருக்கின்றனர். நீங்கள் நேசிக்கும் அவரையே அவர்களும் நேசிக்கின்றனர். நான் அவரை நேசிக்கிறேன் என்னும் பாடலை நாம் பாடும் போது, அது ஒரு சாட்சியாயிருக்கட்டும். உங்களைச் சுற்றிலும் உள்ள யாராவது ஒருவருடன் இப்படி கைகுலுக்குங்கள். அவரை ஆராதிக்கும் வகையில் இதை நாம் மறுபடியும் பாடுவோம். ஒரு செய்திக்குப்பு பிறகு இந்த பாடலைப் பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். பவுல், “நான் பாடினால், ஆவியோடு பாடுவேன்” என்றான். நீங்கள் கை நீட்டி, யாருடனாவது கைகுலுக்கி, “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று சொல்லுங்கள், நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். நான் அவரை நேசிக்கிறேன் (இப்பொழுது ஆவியில் பாடுங்கள்) நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 84நாம் எல்லோரும் இப்பொழுது ஒன்றாக, தலைவணங்கி கர்த்தருடைய ஜெபத்தை ஏறெடுப்போம்: பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல், எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குப் பிரவேசிக்கப் பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்; இராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென். 85ஓ, நித்திய தேவனே, ஜீவனுக்குக் காரணரே, நன்மையான எல்லா ஈவுகளையும் தந்தருளுபவரே, எங்கள் அசுத்தமான இருதயங்களைப் பரிசுத்தப்படுத்தும், ஆண்டவரே. தேவ தூதன் பலீபிடத்திலிருந்து தன் கையில் பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, எங்கள் உதடுகளையும் இருதயங்களையும் தொட்டு, எங்கள் சிந்தனைகளையும் மனதுகளையும் ஆத்துமாக்கைளயும் சுத்திகரிப்பானாக. இந்த 'கோஷர்' அப்பத்தை நாங்கள் புசிக்கும் போது. எங்கள் ஆண்டவரை நினைவு கூரும்படி அதை செய்வோமாக. “அதை அபாத்திரமாய் போஜன பானம் பண்ணுகிறவனெவனும் குற்றமுள்ளவனாயிருப்பான்” என்று எழுதியிருக்கிறதே. ஓ, தேவனே, நாங்கள் உலகத்துடன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாமல், நாங்கள் பரிசுத்தமாக்கப்பட்டு உலகத்தினின்று வேறு பிரிக்கப்பட்டு தேவனுடைய வார்த்தை எங்கள் ஜீவியங்களில் வெளிப்படும் போது; நாங்கள் எரிந்து பிரகாசிக்கிற விளக்குகளாக இருப்போமாக. எங்களை உமது ஊழியக்காரராக உபயோகியும், ஆண்டவரே எங்கள் அனைவரையும் ஒருமித்து உபயோகியும். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 86இப்பொழுது போக வேண்டியவர்களை, வெகு தூரம் காரோட்டி செல்ல வேண்டியவர்களை நாம் அனுப்பி விட்டு, அதன் பிறகு உடனடியாக இராப்போஜனத்துக்கு செல்வோம். எங்களுடன் தங்கி இராப்போஜனத்தில் பங்கு கொள்ள விரும்புகிறவர்களுக்கு. நீங்கள் போக வேண்டுமென்றால்... என் கடிகாரத்தின்படி இப்பொழுது பத்து மணி அடிக்க இருபத்தைந்து நிமிடம் உள்ளது. நாம் ஒருக்கால் பத்து மணிக்கு இராப்போஜனத்தை முடித்துவிடலாம். அதன் பிறகு உடனடியாக அவர்கள் கால்களைக் கழுவுதலை வைத்துள்ளனர். நீங்கள் தங்கி, எங்களுடன் கைக்கொள்ள விரும்பினால், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்போம். தேவனுடைய ராஜ்யத்துக்கும் எனக்கும் என்னுடையவர்களுக்கும் நீங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்களாக இருப்பதால் உங்களுக்கு மறுபடியும் நன்றி செலுத்துகிறேன். 87அந்த மாட்டுப் பையன் சிறுவனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வளவு உயரமுள்ள சிறுவன், ஒரு சிறு மாட்டுப் பையன் தொப்பியை அணிந்து கொண்டு, இன்று காலை என்னிடம் வந்து “சங்கை வில்லியம் பிரான்ஹாம்” என்னும் என் பெயர் பொறிக்கப்பட்ட பர்ஸை, பாக்கெட் புத்தகத்தை எனக்கு வெகுமதியாக அளித்தான். அந்த சிறுவன் யாரென்று எனக்குத் தெரியவில்லை. இன்று காலை நான் கலக்கமுற்று இருந்தபடியால் அந்த சிறுவனுக்கு நன்றி கூற மறந்துவிட்டேன். தேனே, உனக்கு நன்றி சொல்கிறேன். இங்குள்ள அநேகர் சிறு வெகுமதிகளை பில்லியிடம் கொடுத்து என்னிடம் கொடுக்கக் கூறினார்களாம். பில்லி அவைகளை என்னிடம் தந்துவிடுவான். தேவன் உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக. “இந்த சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். தேவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக என்பதே என் ஜெபம். இப்பொழுது நீங்கள் போக வேண்டுமானால், நீங்கள் தேவனுடைய சிறந்தவைகளைப் பெற வேண்டுமென்று உங்களை வாழ்த்துகிறோம். உங்களால் எங்களுடன் தங்க முடியுமானால், நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்போம். 88இப்பொழுது நாம் எழுந்து நின்று இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் என்னும் பாடலின் ஒரு சரணத்தைப் பாடுவோம். அதன் பிறகு, போக வேண்டியவர்களுக்கு ஜெபம் செய்து, அவர்களை அனுப்பிவிடுவோம். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரும் துன்பமும் நிறைந்த பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும் நீ செல்லும் இடமெல்லாம் அதைக் கொண்டு செல் விலையுயர்ந்த நாமம், ஓ, எவ்வளவு இனியது! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிது! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். 89நாம் அடுத்த சரணத்தைப் பாடுவோம். அதன் பிறகு நான் ஒரு சிறு போதகரை கேட்டுக் கொள்ளப் போகிறேன்... அவர் கிரேக்கர் என்று நினைக்கிறேன். அவரை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தேன். அவருடைய பெயர் இப்பொழுது ஞாபகம் வரவில்லை. சகோ. மம்மல்ஸ். அவர் இன்றிரவு இங்கு நம்முடன் நின்று கொண்டிருக்கிறார். அவர் வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர் ஏதோ ஒரு கல்லூரியில் வேத மாணாக்கனாக இருக்கிறார். அவரை அண்மையில் சந்தித்தேன், மிகவும் உத்தமமான சகோதரன். அவர் பயத்தோடும், நடுக்கத்தோடும், அவருடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுகிறார். அவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். அவர் கிரேக்க மொழியை மிகவும் நன்றாகப் பேசுகிறார். இன்றிரவு இந்த சகோதரன் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் ஆரிகான், அல்லது கலிபோர்னியா அல்லது லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து வெகு தூரம் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர் வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நாம் இன்னும் ஒரு சரணத்தைப் பாடி, அவர் தம்மை அமைதியாக்கிக் கொள்ள தருணம் அளிப்போம். அதன் பிறகு அவர் ஜெபம் செய்து நம்மை அனுப்புவார். உங்களால் முடியுமானால் சகோதரனே. சரி. இயேசுவின் நாமத்தைக் கேட்கும் போது தலைவணங்கி அவருடைய கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமது யாத்திரை முடியும் போது அவரை ராஜாதி ராஜாவாய் பரலோகத்தில் முடிசூட்டுவோம். அது மிகவும் அற்புதமாய் இருக்குமல்லவா? விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிது! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிது! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். இப்பொழுது நாம் தலைவணங்குவோம். சரி, சகோதரனே.